அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் -2


                     

மாடு கன்று ஈன்றவுடன் எவ்வாறு பால் உற்பத்தி குறையும் என்பதை முதல் பதிவில் தெரிந்து கொண்டோம். அடுத்து, இந்த முன்கறவை காலங்களில் மாடுகளுக்கு உடலில் என்ன என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன, இச்சமயத்தில் என்ன தீவனம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.மேலும் உடனடி இலவ சமருத்துவ ஆலோசனைக்கு 063837 17150 இல் அழைக்கவும்.


மாடுகளின் தோற்றத்தில் மாறுதல் இருக்குமா?


i)மாடுகளின் உடல் இளைக்கும்:


  • முன்கறவை காலங்களில் பாலை உற்பத்தி செய்ய தேவையான எரிசத்தின் அளவு மாடுகள் உட்கொள்ளும் தீவனத்தின் மூலம் கிடைக்கும் எரிச்சத்தின் அளவை விட மிக அதிகம்.அதனால் இந்த எரிச்சத்தின் பற்றாக்குறையை விரைவில் ஈடு செய்ய மாடுகள் தங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக் கொள்ளுகின்றன . ஒரு மாட்டின் பால் கொடுக்கும் பாரம்பரிய திறனை இந்த முன்கறவை காலத்தில் அறியமுடியும்.

  • அது மட்டுமின்றி எரிச்சத்து பற்றாக்குறையை சரிசெய்ய உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறன் அந்த மாட்டின் பாரம்பரிய தன்மையை பொறுத்து மாறுபடும்.இந்த பாராம்பரிய தன்மை அதிகம் இருந்தால் அதிக அளவிலும் பாராம்பரிய தன்மை குறைவாக இருந்தால் குறைந்த அளவிலும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறன் வேறுபடும் .

  • இந்த பருவத்தில் மாடுகளின் உடல் கட்டு 2.5-3.0 என்ற அளவில் இருக்கும் வகையில் தீவன பராமரிப்பு செய்யவேண்டும் . மாடுகளின் உடல்கட்டு 3.5 என்ற அளவில் இருந்தும் பால் சுரப்பு அதிகரிக்கவில்லை என்றால் மாடுகளுக்கு தாது சத்துக்கள் மற்றும் குடி தண்ணீர் போதவில்லை என்று அறிந்துகொண்டு சரியான தீவன பராமரிப்பு செய்யவேண்டும்.
                                        

மாட்டுக்கு வால் மற்றும் தலையில் பள்ளம் உருவாகுமா?

  • பால் மடியில் பால் நிரம்பி அந்த எடையின் காரணமாக மடியை தாங்கி பிடிக்கும் லிகமெண்ட் எனப்படும் திசு கீழ் நோக்கி இழுக்கப்படுவதால் மாடுகளின் வால் தலை பகுதியின் இரு புறமும் பள்ளம் காணப்படும். அப்படி ஏற்படும் பள்ளத்தின் தன்மையை கொண்டு மாடுகளில் பால் சுரப்பை ஒருவாறு ஊகிக்கமுடியும் .சிலசமயங்களில் மடி மற்றும் அதை சுற்றிலும் நீர் கோத்து வீங்கி இருக்கும்.

  • மாடுகளின் உடற்கட்டு 3.50 லிருந்து குறைந்து 2,5 என்ற அளவில் இருக்கும் .இந்த சமயத்தில் மாடுகளில் அழற்சி பெரும் அளவில் ஏற்பட்டு அதன் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

    
                                          




படுத்து ஓய்வெடுக்கும் நேரம் அதிகரிக்கும்:

  • பால் மடியின் எடை அதிகரிப்பு காரணமாக மாடுகள் நிற்கும் நேரம் குறைந்து படுத்து ஓய்வெடுக்கும் நேரம் அதிகரிக்கும். ஒரு லிட்டர் பால் சுரக்க சுமார் 500லிட்டர் இரத்தம் தேவைப்படுகின்றது .
  • இப்படி படுத்து ஓய்வெடுப்பதால் ஒரு நிமிடத்தில் மடிக்கு செல்லும் இரத்தத்தின் அளவு நிமிடத்திற்கு 3லிட்டரில் இருந்து 5லிட்டர் அளவுக்கு அதிகரிக்கும். பால் உற்பத்தி அதிகரிக்க இந்த செய்கை உதவுகின்றது.
  • மாடுகள் சற்று நேரம் நிற்க விரும்பினாலும் அடிக்கடி நின்றும் படுக்கவும் நேரிடும். இந்த கால கட்டத்தில் உட்கொள்ளும் நேரம் அதிகரித்தாலும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்துவிடும்.

முன்கறவை காலத்தில் அளிக்கவேண்டிய தீவனம் :

  • முன்கறவை காலங்களில் மாடுகளுக்கு பசி குறைந்து மாடுகள் குறைந்த அளவே தீவனம் உட்கொள்ளும் அதனால் இந்த கால கட்டத்தில் மாடுகள் அதிக அளவில் தீவனம் உட்கொள்ள செய்யவேண்டும் அதற்காக ஊட்ட சத்துக்கள் அதிகம் உள்ள செரிமானம் அதிகம் கொண்ட தரமான தீவனங்களை மாடுகளுக்கு அளிக்க வேண்டும்.

  • கன்று ஈன்ற பின் மாடுகளுக்கு முதல் 3 வாரங்கள் தானியங்கள் அதிகம் இருக்கும் தீவனம் தேவை படுகின்றது .இந்த தானியங்கள் மாடுகளின் தினசரி பால் சுரப்பிற்கான எரிச்சத்தை அளிக்கவேண்டும் . இதற்காக தானிய கலவை கொண்ட கலப்பு தீவனம் அளிப்பது நல்லது , உதாரணமாக , பல்வேறு தானியங்கள் 43 -45 % .,செக்கில் ஆடப்பட்ட பிண்ணாக்கு கலவை 23% ., கோதுமை தவிடு 15% பருத்திக் கொட்டை15%.,தாதுஉப்பு 2 % சமையல் உப்பு 1% கொண்ட கலப்பு தீவனம் அளிக்கவேண்டும். இத்துடன் 60-80 கிராம் சமையல் சோடா மாவை இரண்டு பங்காக பிரித்து காலை மற்றும் மாலையில் அளிக்கப்படும் கலப்பு தீவனத்துடன் கலந்து அளிக்க வேண்டும் .
  • மூன்று வாரங்கள் கழித்து தினசரி 15 -20 லிட்டர் பால் கொடுக்கும் மாடுகளுக் கலப்பு தீவனத்தில் 16 -18% அளவு புரத சத்தும் 20 லிட்டர் மேல் பால் கொடுத்தால் 19% புரத சத்தும் இருக்கும் வண்ணம் கலப்பு தீவனம் அளிக்க வேண்டும் .தினசரி பால் சுரப்பிற்கு ஏற்றவாறு கலப்பு தீவன அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

  • மாடுகளுக்கான ஒரு நாளைய கலப்பு தீவனத்தை காலை மற்றும் மாலை இரு வேலைக்கு அளிப்பதற்கு பதில் மூன்று அல்லது நான்கு வேலையாக பிரித்து தீவனம் அளித்தால் அதன் பயன்பாடு அதிகரிக்கும்.

  • தானியங்களை பொறுத்தமட்டில் மக்காச் சோளம் கண்டிப்பாக இருக்க வேண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட தானிய கலவையாக இருக்க வேண்டும்.

  • கலப்பு தீவனத்தில் எரிச்சத்தின் அளவை அதிகரிக்க பருத்தி கொட்டை அல்லது சோயா மொச்சையை சேர்க்கவேண்டும்.

  • இந்த புரத சத்தில் சுமார் 60-65 % மாடுகளின் முதல் வயிற்றிலும் 35-40 % மாடுகளின் சிறுகுடலில் செரிக்கும் வண்ணம் தயாரிக்க வேண்டும்

  • மாடுகளில் அமிலத்தன்மை மற்றும் செரிமான பிரச்சினைகளை தவிர்க்க மொத்த கலப்பு தீவனத்தை 4-5 பகுதிகளாக பிரித்து அளிக்க வேண்டும் . கலப்பு தீவனத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து அளிக்க வேண்டும்.

  • பொதுவாக மாடுகள் பால் கறந்த பின்பு வேகமாக தீவனம் உட்கொள்ளும் .மாடுகளுக்கு முதலில் புல் கலவையையும் அதன் பின் கலப்பு தீவனமும் அளிக்க வேண்டும்.

  • மாடுகள் கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலிலும் சுமார் 2 கிராம் சுண்ணாம்பு சத்து மாட்டின் உடலில் இருந்து வெளியேறுகின்றது .பால் அதிகம் சுரக்கும் இந்த காலகட்டத்தில் மாடுகளுக்கு சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்படும் . இதை தவிர்க்க மாடுகளுக்கு தண்ணீர் அளிக்கப்படும் தொட்டியின் உட்புறம் சுண்ணாம்பை தடவி வெயிலில் உலரவைத்து பின்பு அதில் சுத்தமான தண்ணீர் அளிக்கவேண்டும்.
                                         

  • மாடுகளுக்கு முன்கறவை காலங்களில் இயல்பை விட பசி 30-50% குறைவாக இருக்கும் .அதனால் உச்ச கட்ட பால் சுரப்பை அதிகரிக்க தீவனம் உட்கொள்ளும் அளவை அதிகரிக்க முயற்சி செய்தும் முடியாவிட்டால் மாடுகளின் தீவனத்தில் ஊட்ட சத்துக்கள் குறிப்பாக புரதம் மற்றும் எரிச்சத்தின் அளவை இன்னும் கூடுதலாக்கி அளிக்கவேண்டும் கன்று ஈன்று 10 -12 வாரங்கள் கழித்து தான் பசியின் அளவு சிறுக சிறுக அதிகரிக்கும்.

  • முன்கறவை காலங்களில் சரியான  தீவன பராமரிப்பு  செய்யாவிட்டால் பாலை சுரக்க மாடுகள் தேவைக்கு அதிகமாக உடலில் இருக்கும் கொழுப்பை பயன்படுத்தினால் உச்சகட்ட பால் உற்பத்தி அளவு குறையும் .இத்துடன் கன்று ஈன்றபின் வரும் முதல் சினை சுழற்சி தாமதமாகும் .

  • இவை அனைத்தும் முன்கறவை காலங்களில் கவனிக்க வேண்டிய தீவன முறைகளாகும். இதற்கடுத்த பதிவில் மத்திய கறவை காலத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் கால்நடை நோய்களுக்கான ஆலோசனைக்கு 063837 17150-இல்அழைக்கவும்.


எழுத்தாளர் பற்றி



                                                     

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்:

யுவர்பார்ம் செயலியை

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க:

  1. குடற்புழு நீக்கத்திற்கு முன் மற்றும் பின் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்-பாகம் 2
  2. கறவை மாடுகளில் தரமான பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? பாகம் -1

Comments

Popular posts from this blog

பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?

பால் உற்பத்தியை அதிகரிக்க – சேலஞ்சு தீவன பராமரிப்பு ஒரு அற்புதமான தீர்வு

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம்