கால்நடைகளின் உற்பத்தி குறையாமல் இருக்க சுத்தமான தண்ணீரை அளியுங்கள்


தண்ணீரின் தரம் சோதிக்கப்படாமல் கால்நடைகளுக்கு அளிக்கப்படுவதால் கால்நடைகளில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர் அதை பற்றி  அறியாமலே நஷ்டம் அடைகின்றனர். 

மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் மட்டுமின்றி அவைகளுக்கு அளிக்கப்படும் தண்ணீரும் தான் மாடுகளில் உற்பத்தி அளவை நிர்ணயம் செய்கின்றன.

தண்ணீர் தொட்டியில் அளிக்கப்படும் தண்ணீர் மற்றும் தீவனங்களில் இயல்பாகவே இருக்கும் ஈரப்பதம் மூலம் கால்நடைகள் தண்ணீரை பெறுகின்றன.

இதை தவிர,  தாங்கள் உட்கொண்ட தீவனத்தில் இருக்கும் மாவுச்சத்து,
புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தை உடலில்  வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படுத்தும் சமயம் உற்பத்தியாகும் தண்ணீர் மூலமும் ( Metabolic water ) தங்கள் தண்ணீர் தேவையை ஈடு செய்கின்றன. 

100 கிராம் மாவுச்சத்தை வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படுத்தும் பொழுது 60 கிராமும், புரதச்சத்தை பயன்படும் பொழுது 40கிராமும், கொழுப்புச் சத்தை பயன்படும்பொழுது 109 கிராமும் உடலில் தண்ணீர் உற்பத்தியாகின்றது. 

கால்நடைகள் தண்ணீர் குடிப்பது அவை உட்கொண்ட தீவனத்தின்  அளவையும் அவை அளிக்கும் பாலின் அளவையும் பொறுத்தது. 

மாடுகள் பால் கறந்த பின் அவற்றின் பசி அதிகரிக்கும். அதனால் அவற்றின் தீவனம் உட்கொள்ளும் அளவும் அதிகரிக்கும்.  தீவனம் உட்கொண்ட அளவு மற்றும் அவற்றின் பால் உற்பத்தியை பொறுத்து மாடுகள் பால் கறந்த பின் ஒரு மணி நேரத்தில்  அன்றைய  தண்ணீர் தேவையில் 50%  அளவு வரை குடிக்கின்றன.

அதனால் தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் ஆடு மாடுகளுக்கு எரிச்சத்திற்காக  தானியங்களுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்பட்ட அளவில் கொழுப்பு அல்லது எண்ணெய்  சேர்த்தால் தண்ணீர் பற்றாக்குறையின் வீரியம்  சிறிது குறையும்.



மாடுகளுக்கு சுத்தமான குடிநீர் அளியுங்கள்:

மாடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீர் தரமானதாக இருக்க வேண்டும்.

துர்நாற்றம் வீசும் தண்ணீர் மற்றும் சுவை குறைந்த தண்ணீரை மாடுகள் உட்கொள்ளாது. உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்தால் தீவனம் உட்கொள்ளும் அளவும் குறைந்து விடும். 

உப்பு சுவை நிறைந்த தண்ணீர், நைட்ரஜன் சத்து அதிகம் கொண்ட தண்ணீர், பக்கத்து கழனியில் இரசாயன உரம் அல்லது பூச்சி கொல்லி மருந்து அடிக்கப்பட்டு மழை காரணமாக அந்த பூச்சி கொல்லி மருந்து அல்லது உரத்தின் ஒரு பகுதி கிணற்றில் கலந்திருந்தால் தண்ணீரின் தரம் குறையும்.

தரம் குறைந்த தண்ணீர் அளிப்பதை காட்டிலும் தரமான தண்ணீர் அளிக்கப்பட்டால் மாடுகளில் பால் உற்பத்தி சற்று அதிகமாகும்.

உங்கள் பண்ணை கிணற்றில் இருந்து தண்ணீரை வருடம் ஒரு முறை ஆய்வகத்தில் கொடுத்து அது கால்நடைகள் குடிப்பதற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒரே கிணற்றில் இருக்கும் தண்ணீரின் தன்மை பல காரணங்களால் அடிக்கடி மாறக்கூடியது 

தண்ணீரில் இருக்கும் கரைந்திருக்கும் மொத்த திடப்பொருட்களின் அளவு அல்லது உப்பு அளவு, கார - அமில தன்மை ( 6-7 ), நைட்ரோஜன் அளவு, பாக்டீரியாக்கள் போன்றவை சோதிக்கப்பட வேண்டும்.

தண்ணீரில் கரைத்திருக்கும் மொத்த திடப்பொருட்களின் அளவு:

கிணறு இருக்கும் இடம், மண்ணின் தன்மை போன்றவற்றை பொறுத்து அதில் பல வகையான உப்புக்கள் கரைந்திருக்கும் .இவ்விதம் தண்ணீரில்  கரைந்திருக்கும் உப்புக்கள் தண்ணீரின் சுவையை மாற்றுவதோடு அதை குடிக்கும் மாடுகளில் பல வித பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 3000 மி.கி அளவுக்கு  குறைவாக  மொத்த உப்புக்கள் இருந்தால் அதை குடிக்கும் ஆடு, மாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவற்றின் வளர்ச்சி பால் உற்பத்தி போன்றவை பாதிக்கப்படாது.

ஒரு ஆய்வில் தண்ணீரில் உப்புகள் மூலம் கரைத்திருக்கும் மொத்த திடப்பொருட்களின் அளவு 6,000 ppm இருக்கும்பொழுது மாடுகளின் உடல் எடை நல்ல தண்ணீரை  ( 1,300 ppm ) குடித்த மாடுகளை விட குறைந்த வளர்ச்சியை அடைந்தன. அதே சமயம் தண்ணீரில் உப்புகள் மூலம் கரைத்திருக்கும் மொத்த திடப்பொருட்களின் அளவு 4,400 ppm வரை இருந்தாலும் பால் உற்பத்தியில் மாற்றம் ஏற்படவில்லை.


தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள்:


மாடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீரில் நோயை பரப்பும் நுண்ணுயிர் குறிப்பாக E,coli பாக்டீரியாக்கள் இருக்க கூடாது.

கன்றுகளுக்கு அளிக்கப்படும் 100 மிலி தண்ணீரில் 1 பாக்டீரியா வரை மட்டுமே இருக்கலாம்.

மாடுகளுக்கு 100 மி.லி தண்ணீரில் 10-15 பாக்டீரியா வரை மட்டுமே இருக்கலாம். 100 மி.லி தண்ணீரில் 10இலட்சம் பாக்டீரியாக்கள் இருந்தால் கால்நடைகளுக்கு கண்டிப்பாக அளிக்க கூடாது.




உப்பு தன்மை அதிகம் கொண்ட தண்ணீர்:

கால்நடைகளுக்கு நீண்ட நாட்கள் உப்பு தண்ணீரை அளித்தால் ஆரம்பத்தில் அவை சரிவர குடிக்காவிட்டாலும் நாளடைவில் குடிக்க தொடங்கி விடும்.

உப்பு தண்ணீர் குடிக்கும் மாடுகளில் தீவனம் உட்கொள்ளும் அளவு சற்று குறையும்.  உணவு குழலில் தீவனம் நகரும் வேகம் குறைவதால் மாடுகள் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும்.

புரத செரிமானம் குறையும்.

தீவனத்தில் இருக்கும் எரிச்சத்து உடலில் பயன்படும் திறன் குறையும் .

உடல் வளர்ச்சி குறையும்.

உப்பு தண்ணீரை நீண்ட காலங்கள் குடிக்கும் மாடுகளில் பால் உற்பத்தி குறையும். இந்த குறைவு கடும் வெப்ப காலங்களில் அதிமாகவும் குளிர் காலங்களில் குறைவாகவும் இருக்கும்.

இந்த தாக்கம் மாடுகளுக்கு அளிக்கும் தீவனத்தில் எரிச்சத்து குறைவாக இருந்தாலோ அல்லது வெப்ப அழற்சி காலங்களில் அதிகரிக்கும். அதனால் உப்பு தண்ணீரை நீண்ட நாட்கள் மாடுகள் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தீவனத்தில் எரிச்சத்தை அதிகரிக்க வேண்டும்.

உப்பு தன்மை அதிகம் கொண்ட தண்ணீரை தொடர்ந்து ஆடு, மாடுகள் குறிப்பாக செம்மறி குடித்தால் ஆடுகளின் இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும் .

வெள்ளாடுகளின் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 1.2 -1.6% உப்பு இருக்கும் தண்ணீரை குடித்த ஆடுகளில் ஹீமோகுளோபின் குறிப்பிட தக்க அளவு குறைந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு ஆய்வில் செம்மறி ஆடுகளுக்கு 2800 ppm கரைந்திருக்கும் மொத்த திடப்பொருட்கள் கொண்ட தண்ணீரை அளித்தபொழுதும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் ( Haemoglobin ) அளவு குறைந்தது.

எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

இளம் கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க தயிர் அளியுங்கள்

பட்டுப்புழு வளர்ப்பு கழிவுகளை தீவனமாக பயன்படுத்துவது எப்படி?









Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)