மக்காச்சோள தவிடை தீவனமாக பயன்படுத்தி மாடுகளில் தீவன செலவை குறையுங்கள்



மக்காச்சோள தவிடை தீவனமாக பயன்படுத்தி மாடுகளில் தீவன செலவை குறையுங்கள்


◆ மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச் தயாரிப்பதற்காக மக்காச்சோளம் ஊற வைக்கப்பட்டு உடைக்கப்படுகிறது. இச்சமயம் மக்காச்சோளத்தின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிற தோல் தனியே பிரிக்கப்பட்டு கழிவாக கிடைக்கிறது. இக்கழிவே மக்காச்சோள தவிடு எனப்படுகிறது.

◆ இக்கழிவை வாங்கி நன்கு காய வைத்து அரைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் இக்கழிவு ஈரப்பதம் நிரம்பிய நிலை மற்றும் நன்கு உலர்ந்த நிலை என்ற இரு நிலைகளிலும் கிடைக்கின்றது

◆ இந்த இரு நிலைகளிலும் கால்நடைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க பெருமளவு வித்தியாசம் இல்லை என்றாலும் உலர்ந்த நிலை தவிடை விட ஈரப்பதம் நிரம்பிய தவிடில் ஊட்டச்சத்துக்களை பால் அல்லது இறைச்சியாக மற்றும் திறன் (Feed Efficiency ) 2% அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

◆ இதில் புரதம் 11.3% , கொழுப்பு 4.7% , நார் 8.6% உள்ளது. இதில் கிலோவுக்கு 4,570 கிலோ கலோரி மொத்த எரிச்சத்து உள்ளது. இந்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து ( Metabolizable Energy ) 68% , பால் உற்பத்திக்கு பயன்படும் எரிச்சத்து 45% உள்ளது.

◆ நமது கறவை மாடுகள் மிக குறிப்பாக கோடை காலத்தில் பெரும்பாலும் எரிச்சத்து குறைபாட்டுடன் பராமரிக்கப்படுகின்ற இந்த காலத்தில் எரிச்சத்து மிகுந்த மக்காச்சோளத் தவிடை கால்நடைகளுக்கு எரிச்சத்து தீவனமாக பயன்படுத்தலாம்.

◆ இதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு நாம் பொதுவாக கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் அரிசித்தவிடு மற்றும் கோதுமை தவிடில் உள்ளதை விட சற்றே அதிகமாக உள்ளது.

◆ மக்காச்சோளத் தவிடை மக்காச்சோள தனியத்திற்கு பதிலாக 15-25 % வரை பயன்படுத்தலாம். எரிச்சத்து மிக்க மக்காச்சோள தவிடை புரதச்சத்து மிக்க மர இலைகளுடன் சேர்த்து கோடையில் தீவனம் அளிக்கலாம்.

◆ குறைந்த அளவு பால் தரும் மாடுகளின் கலப்புத்தீவனத்தில் மக்காச்சோள தானியத்திற்கு பதிலாக 25% வரை இதை பயன்படுத்தினால் பால் உற்பத்தி அளவிலோ அல்லது தரத்திலோ எந்த குறைபாடும் ஏற்படவில்லை என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

◆ செரிமானம் குறைந்த புல்லுடன் 1.25 கிலோ அளவு மக்காச்சோள தவிடை சேர்த்து மாடுகளுக்கு அளித்த சமயம் புல்லின் செரிமானம் அதிகரித்ததுடன் பால் உற்பத்தியும் அதிகரிப்பதாக ஒரு ஆய்வில் அறியப்பட்டது.

◆ ஊட்டச்சத்து குறைந்த புற்களை மேயும் ஆடுகளுக்கு எரிச்சத்து மிக்க இந்த மக்காச்சோள தவிட்டுடன் புரதச்சத்து மிக்க கிளைரிசிடியா அல்லது சூபாபுல் மர இலைகளை கூடுதலாக சேர்த்து தீவனம் அளித்தால் இந்த மர இலைகளில் உள்ள புரதச்சத்து மிக நல்ல முறையில் செரிக்கப்பட்டு ஆடுகளின் வளர்ச்சிக்கு பயன்படும்.

◆ வளரும் வெள்ளாட்டு குட்டிகளுக்கு தினசரி 150 கிராம் அளவிற்கு உலர்ந்த மக்காச்சோள தவிடை கோடை காலத்தில் சேர்த்து அளித்தால் உடல் எடை நன்கு கூடும்.

கவனம் தேவை:

◆ ஈரம் நிறைந்த மக்காச்சோள தவிடை நீண்டநாட்கள் சேமித்து வைக்க முடியாது. அப்படி செய்தால் இதில் பூஞ்சை படர வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க மதுபான அலைக்கழிவை சைலேஜாக பதப்படுத்துவதை போலவே இதையும் பதப்படுத்தி சேமிக்கலாம்.

◆ மாடுகளுக்கு இதை தீவனமாக அளிக்கும் சமயம் நீங்கள் அளிக்கும் புல் மற்றும் வைக்கோலை எந்த வகையிலும் குறைத்து அளிக்க கூடாது.

◆ மாடுகள் உட்கொள்ளும் மொத்த தீவன உலர்ப்பொருளில் 25% குறைவாகவே இந்த தவிடை அளிக்கவேண்டும். உதாரணமாக ஒரு சுமார் 400 கிலோ எடை கொண்ட மாடு நாள் ஒன்றுக்கு 8.0 கிலோ வரை தீவன உலர்ப்பொருளை உட்கொள்ளும் இந்த மாட்டிற்கு இந்த உலர்ந்த தவிடை நாள் ஒன்றுக்கு 2.00 - 2.25 கிலோ வரை அளிக்கலாம். அதற்கு மேல் அளித்தால் அவை புல் மற்றும் வைக்கோலை உட்கொள்ளும் அளவை குறைத்துக்கொள்ளும். இதனால் மேற்கூறிய பிரச்சனை உருவாக வாய்ப்பு ஏற்படும்.

◆ தீவனத்தில் மக்காச்சோள தவிடின் அளவு அதிகரிக்க அதிகரிக்க பாலில் கொழுப்பு சத்து குறையும்.


எனவே,

◆ மக்காச்சோள தவிடை தொழிற்சாலையில் இருந்து வாங்கி ஈரத்தை உலர்த்தி அரைத்து வைத்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

 ◆ இதை கொண்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் மக்காச்சோள தானிய அளவை 25 % வரை குறைத்துக்கொண்டு இந்த தவிடை சேர்க்கலாம்.

◆ எரிச்சத்து மிக்க மக்காச்சோள தவிடை புரத சத்து மிக்க மர இலைகளுடன் சேர்த்து கோடையில் தீவனம் அளிக்கலாம்.

◆ வளரும் வெள்ளாட்டு குட்டிகளுக்கு தினசரி 150 கிராம் அளவிற்கு உலர்ந்த மக்காச்சோள தவிடை கோடை காலத்தில் சேர்த்து அளிக்கலாம்.

◆ மாடுகள் உட்கொள்ளும் மொத்த தீவன உலர்ப்பொருளில் 25 - 30% குறைவாகவே இந்த தவிடை அளிக்க வேண்டும்.

◆ மக்காச்சோள தவிடின் அளவு அதிகரிக்க அதிகரிக்க பாலில் கொழுப்பு சத்து குறையும்.

எழுத்தாளர் பற்றி







பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


அரிசி தவிடை பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்

கோதுமை  தவிடு  பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்





Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)