கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்
கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்!
◆ கோதுமை சாகுபடியில் உபபொருளாக கிடைப்பது கோதுமை தவிடு. கோதுமை தவிடு மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் 17%, கொழுப்பு 3.8% , நார் 10.5%, ஸ்டார்ச் எனப்படும் மாவு சத்து 27 % உள்ளன. கோதுமை தவிடு மொத்தத்தில் 60% வரை செரிமானம் கொண்டது.
◆ கோதுமை தவிடில் உள்ள புரதம் 77%, நார் 20% , கொழுப்பு 63% , மற்றும் கரையும் மாவு சத்துக்கள் 84% வரை செரிக்கும் திறன் கொண்டவை.
◆ கோதுமை தவிடில் செரிக்க கூடிய புரதம் 10.30%
◆ மொத்த செரிக்கக்கூடிய ஊட்ட சத்துக்கள் 73% உள்ளன.
◆ கோதுமை தவிடில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 4,520 கிலோ கலோரிகள் உள்ளது.
◆ இந்த எரிச்சத்தில் சுமார் 67% செரிக்கக்கூடிய எரிச்சத்து.
◆ மொத்த எரிச்சத்தில் சுமார் 56% வளர்சிதை மாற்றங்களுக்காகவும் 35%பால் உற்பத்திக்கும், 33% இறைச்சி உற்பத்திக்கும் பயன்படுகின்றது.
◆ பிற தானிய தவிடுகளில் உள்ளதைப்போல கோதுமை தவிடிலும் சுண்ணாம்பு சத்து குறைவாகவும் ( 0.14% ) பாஸ்பரஸ் சத்து அதிகமாகவும்
( 1.1% ) உள்ளது.
◆ பொதுவாக தீவனங்களில் உள்ள சுண்ணாம்பு சத்தும் பாஸ்பரஸ் சத்தும் மாடுகளுக்கு பயன்படவேண்டுமெனில் அவற்றின் இடையே உள்ள விகிதம் 2:1 என்ற அளவில் இருக்க வேண்டும்.
◆ ஆனால் கோதுமை தவிடில் இது 1: 8 அளவில் உள்ளது. அதனால் கோதுமை தவிடு மட்டும் அளிக்கும் விவசாயிகள் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள தீவனங்களை அளிக்க வேண்டும்.
இந்திய தர நிர்ணய கழகத்தின் படி பரிந்துரை படி கோதுமை தவிடில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் ( % )
◆ கோதுமை தவிடில் தாது சத்துக்கள் - குறிப்பாக இரும்பு, துத்தநாகம், மக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
◆ இந்த தவிடில் உள்ள மொத்த பாஸ்பரஸ் தாதுவில் 80 % பைடேட் என்ற நிலையில் உள்ளது.
◆ இது தாதுக்களுடன் சேர்ந்து ஒரு கலவையாக இருப்பதால் இந்த தாதுக்கள் மாடுகளுக்கு கிடைக்கும் அளவு பெரிதும் குறைந்துவிடும்.
◆ ஆனால் மாடுகளின் முதல் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் இந்த ஓரளவுக்கு செயல் இழக்க வைப்பதால் இந்த கோதுமை தவிடில் இருக்கும் பாஸ்பரஸ் சத்தில் பெரும் பகுதி மாடுகளுக்கு கிடைக்கும்.
◆ கோதுமை தவிடில் உள்ள நார்ச்சத்து மாடுகளின் குடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது.
◆ கோதுமை தவிடின் அடர்த்தி ( 0.17 - 0.25 டன்/ கன மீட்டர் ) அரிசி தவிடை விட
( 0.32 - 0.33டன்/ கன மீட்டர் ) குறைவாக உள்ளதால் கலப்பு தீவனத்தில் அரிசி தவிடை விட கோதுமை தவிடை எளிதாக கலக்க முடியும்
◆ அரிசி தவிடை விட கோதுமை தவிடு மென்மையானது மட்டுமல்ல அதிக சுவை கொண்டது. இந்த தவிடை சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்தால் நல்ல மணம் கொடுக்கும்.
◆ கோதுமை தவிடு மாடுகளில் பசியை ஒருமுகப்படுத்துவதுடன் ஒருவித நிறைவை அளிக்கும். இதில் உள்ள நார் தண்ணீரை உறிஞ்சும் தன்மை அரிசி தவிடை விட மிக அதிகம்.
◆ இதில் உள்ள நார்ச்சத்து மாடுகள் உட்கொண்ட தீவனங்கள் குடலில் நகர்ந்து செல்லும் வேகத்தை குறைப்பதால் தீவனங்கள் குடலில் நெடுநேரம் தங்கி நன்கு செரிக்கும்.
◆ கோதுமை தவிடின் நார்ச்சத்து அரிசி தவிடை விட குறைந்த அளவே செரிக்கப்படும். இதனால் செரிக்கப்படாத நார் அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சி மாடுகள் இளகிய சாணம் கழிக்க உதவுகின்றது.
◆ மாடுகளில் சாணம் உற்பத்தியாகும் அளவை அதிகரித்து மலச்சிக்கல் ஏற்படாமல் மாடுகள் இளகிய சாணம் கழிக்கவும் உதவுகின்றது.
◆ இந்த காரணத்தால் மாடுகளில் பெருங்குடல் பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கின்றது.
◆ கோதுமை தானியத்தில் இருக்கும் உயிர் சத்துக்களான மொத்த நியாசினில் 80%, உயிர் சத்து B6ல் 60% உயிர் சத்து B1ல் 32%, தவிடில் தான் உள்ளது. இந்த வகையில் இது அரிசி தவிட்டை விட சிறப்பானது.
◆ கோதுமை தவிடின் அடர்த்தி அரிசி தவிடை விட குறைவாக உள்ளதால் மாடுகளுக்கு வழக்கமாக அளிக்கப்படும் அடர்த்தி மிக்க தீவனங்களின் அடர்த்தியை வெகுவாக குறைக்க பயன்படுகின்றது. இதன் அடர்த்தி குறைவாக உள்ளதால் மாடுகளின் கலப்புத் தீவனத்தில் சேர்த்து நன்கு கலக்க முடியும்.
◆ தாது சத்துக்களை, குறிப்பாக பாஸ்பரஸ் தாதுடன் சேர்ந்து அவை மாடுகளுக்கு கிடைக்காமல் செய்யும் பைடிக் அமிலம் அரிசி தவிடில் 10%, கோதுமை தவிடில் 5% உள்ளதால் கோதுமை தவிடை உட்கொள்ளும் மாடுகளுக்கு பாஸ்பரஸ் தாது அதிகமாகவும் (23%) அரிசி தவிடை உட்கொள்ளும் மாடுகளுக்கு குறைவாகவும் (17%) பாஸ்பரஸ் சத்து கிடைக்கும்.
◆ அரிசி தவிடை போல இல்லாமல், கோதுமை அரைக்கப்படும் பொழுது கோதுமை உமியின் பெரிய துகள்களும் தவிடின் சிறிய துகள்களும் சேர்ந்தே வரும். இந்த பெரிய துகள்களில் கோதுமை மாவு அதிக அளவில் ஒட்டிக் கொண்டுள்ளதால் கோதுமை தவிடின் ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகமாகவே இருக்கும்.
◆ அரிசி தவிட்டு உமியைப் போல கோதுமை உமி அவ்வளவு கடினமாதல்ல அதனால் அரிசி உமி ஏற்படுத்தும் சிக்கல்களை கோதுமை உமி ஏற்படுத்தாது.
பொதுவாக அரிசி தவிடில் இருப்பதை போன்று கோதுமை தவிடில் அதிக அளவு எண்ணெய் இல்லாத காரணத்தால், கோதுமை தவிட்டில் எண்ணெய் தொடர்புடைய சிக்கல்கள் இல்லை. அதனால் அரிசி தவிடை போலில்லாமல் கோதுமை தவிடை நீண்ட நாட்கள் தவிடை சேமிக்க முடியும்.
◆ கோதுமை தவிடை இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்தால் லைபேஸ் என்ற நொதியின் செயல்பாட்டை செயலிழக்க செய்யமுடியும். அதனால் கோதுமை தவிடில் உள்ள எண்ணெய் அரிசி தவிடை போல விரைவில் கெட்டுப் போகாமல் தவிர்க்க முடியும்.
◆ அரிசி தவிடை விட கோதுமை தவிடு மிக எளிதாக செரிமானம் ஆவதால், உடல் நிலை சரியில்லாத சமயங்களில் மாடுகளுக்கு அளிக்க இது சிறந்தது.
◆ குறிப்பாக, மாடுகளில் கன்று ஈன ஓரிரு வாரங்களில் இருந்து மாடுகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பராமரிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் மாடுகளுக்கு அரிசி தட்டுக்கு பதில் கோதுமை தவிடு அளிப்பது நல்லது.
கால்நடைகளுக்கான கலப்பு தீவனத்தில் கோதுமை தவிடு சேர்க்க வேண்டிய அளவு:
இளம் கன்றுகள் - 10%கறவை மாடுகள் - 20%
ஆட்டுக்குட்டிகள் - 5%
வளர்ந்த ஆடுகள் - 20%
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்
உங்கள் தகவல்களுக்கு நன்றி சார்
ReplyDelete