மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்

 

                                         


மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்

● மக்காச்சோளம், பார்லி, கோதுமை போன்ற தானியங்களில் இருந்து ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து பிரித்தெடுக்கும் செயல் முறைகளில் பல உப பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று மக்காச்சோள தவிடு மற்றொன்று Steep எனப்படும் திரவம். மக்காச்சோள தவிடும் Steep திரவமும் கலந்த கலவையே க்ளுட்டன் தீவனம் (Gluten Feed).

● இது பூசா என்ற பெயரில் கிராமப்புறங்களில் மாட்டு தீவனமாக விற்பனை செய்யப்படுகின்றது.

● எந்த தானியத்தில் இருந்து இது உப பொருளாக கிடைக்கிறதோ அந்த தானியத்தின் பெயரில் பூசா என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாக,  மக்காச்சோள பூசா, கோதுமை பூசா போன்றவை. 

● இந்த பூசா ஈரமான நிலை மற்றும் உலர்ந்த நிலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.

உலர்ந்த பூசாவை விட ஈரமான பூசா சற்று அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. ஆனால் ஈரமான பூசாவை நீண்ட நாட்கள் சேமிக்க முடியாது.

● கோடை காலத்தில் ஒரு சில நாட்களும் குளிர் காலத்தில்  1 -2 வாரங்கள் மட்டுமே ஈரமான பூசாவை சேமிக்க முடியும்.

● மக்காச்சோள பூசா ஓரளவு (Moderate ) புரத சத்தும் , மக்காச்சோளத்தை விட சற்றே குறைவாக எரிச்சத்தும் நிரம்பியது ( 75-83 Vs 88 %. ) . மக்காச் சோளத்தில் எரி சத்து அதன் மாவு சத்திலிருந்து கிடைத்தால், இந்த பூசாவில் எரிச் சத்து, செரிக்க கூடிய நார் மற்றும் மற்றும் அதில் உள்ள கொழுப்பு சத்து மூலமே கிடைக்கின்றது.

● மக்காச்சோள பூசாவில் ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து குறைவாகவும் செரிக்கக்கூடிய நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் கலப்பு தீவனம் குறைவாகவும், புற்கள் அதிகமாகவும் கொடுத்து வளர்க்கப்படும் மாடுகளுக்கு இது நல்ல தீவனம் ஆகும்.

மக்காச்சோள பூசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

● மக்காச்சோள ஈரமான பூசாவில் புரதம் 14-22% உள்ளது. நார், கொழுப்பு ,மாவு சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 7-8.4 ,3-5 ,26,7.2-9.0 % உள்ளன. இதில் எரிச்சத்து கிலோவுக்கு 4470 கிலோ கலோரிகளும் , வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் ( Metabolizable Energy ) எரிச்சத்து 2829 கிலோ கலோரிகளும் மொத்த செரிமான ஊட்டச் சத்துக்கள் 90% உள்ளன.

● மக்காச்சோளத்துடன் ஒப்பிடுகையில் இந்த பூசாவில் புரதம், நார், சாம்பல் சத்து மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் ( Metabolizable Energy ) எரிச்சத்துக்கள் சற்று அதிகமாகவும், பால் உற்பத்திக்கு மட்டுமே பயன்படும் எரிச்சத்து சற்று குறைவாகவும் உள்ளன.

● மக்காச் சோள பூசாவில் சுண்ணாம்பு சத்து மிக மிக குறைவாகவும், பாஸ்பரஸ் சத்து மிக மிக சத்து அதிகமாகவும் உள்ளது.

● இவை இரண்டிற்கும் இடையே உள்ள விகிதம்  2:1 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால், இது 1:10 என்ற அளவில் உள்ளது. அதனால் மொத்த தீவனத்தில்  30-35%  அளவுக்கு  மேல்  மக்கா சோள பூசாவை தீவனம் அளித்தால் மாடுகளில் இந்த இரண்டு தாதுக்களும் சரியாக பயன்படாதது மட்டுமின்றி சில பிரச்சினைகளும் மாடுகளில் ஏற்படும்.

● உதாரணமாக, சுமார் 350 கிலோ எடை கொண்ட மாட்டுக்கு 3.0 -  3.5 கிலோவுக்கு மேல் அளித்தால் மாடுகளில் சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

● இந்த நிலை வராமல் தவிர்க்க வழக்கமான தீவனம் உட்கொள்ளும் மாடுகளுக்கு அளிக்கப்படும் சுண்ணாம்பு சத்தை  சற்று அதிகமாக அளிக்கவேண்டும்.

● மாடுகளுக்கு எரிச்சத்து தேவைக்காக மக்காச் சோளம் அதிகமாக அளித்தால் அமில தன்மை ஏற்பட்டு அதனால் அவை உட்கொள்ளும் புற்களின் செரிமான தன்மை குறையும்.

● ஆனால், மக்கா சோளத்திற்கு பதிலாக ஏறத்தாழ அதே அளவு எரிச்சத்தை கொண்டுள்ள மக்காச் சோள பூசா அளிக்கப்பட்டால் அமிலத்தன்மை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

● இந்த பூசாவில் உள்ள புரதச்சத்தில் வரை 35% பைபாஸ் புரதம் உள்ளது. இது கறவை மாடுகளின் தீவனத்தில் இருக்க வேண்டிய சரியான அளவாகும்.

கறவை மாடுகளின் தீவனத்தில்  மக்காச் சோள பூசா சேர்ப்பதால் பால் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள்:

● பால் உற்பத்தி குறையாது.

● சில மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

● அதிக அளவில் இந்த பூசாவை அளித்தால் பாலில் கொழுப்பு சற்று குறையும்.
பொதுவாக பாலின் SNF அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்காது.

● அதே சமயம் மாடுகளுக்கு அளிக்கப்படும் பசும் புல் அல்லது கலப்பு தீவனத்தில் சேர்க்கப்படும் மக்காச் சோள அளவை குறைத்துக்கொள்ளலாம்.
ஒரு ஆய்வில் ஆய்வில் மாடுகளுக்கான கலப்பு தீவனத்தில் 20% வரை உலர்ந்த
மக்காச்சோள பூசா அளிக்கப்பட்ட பொழுது, பால் உற்பத்தி அதிகரித்தது. ஆனால், கொழுப்பு சத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதே சமயம் SNF அளவு குறைந்தது.

● மற்றொரு ஆய்வில் ஆய்வில் மாடுகளுக்கான கலப்பு தீவனத்தில் 30% மேல் ஈரமான வரை பல ஆய்வுகள் மூலம் உலர்ந்த மக்காச்சோள பூசாவை விட ஈரமான பூசா ஊட்டச் சத்துக்கள் அதிகம் கொண்டதாகவும் பால் உற்பத்திக்கு சிறந்தது எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

● இந்த பலன் பல ஈற்றில் ஈன்ற மாடுகளை விட முதல் ஈத்தில் ஈன்ற மாடுகளில் சற்று கூடுதலாக இருக்கும்.

● பூசாவை தேவைக்கு மேல்அளித்தால் இந்த பலன் குறைந்துவிடும்.


செம்மறி ஆடுகளுக்கு மக்காச்சோள பூசா:

● ஆடுகளுக்கு மொத்த தீவனத்தில் 30% வரை மக்காச் சோள பூசா அளிக்கலாம். இந்த பூசாவை ஆடுகளுக்கு தீவனமாக அளித்தால், ஆடு வளர்ச்சி, இறைச்சி கிடைக்கும் அளவு குறைவதில்லை.

● ஆடுகள் மூலம் கிடைக்கும் இறைச்சியின் ஊட்டச் சத்து மற்றும் சுவைகளில் எந்த மாற்றமும் இருக்காது.

● அதே சமயம் ஆடுகளுக்கு அளிக்கப்படும் புல் போன்ற தீவனங்களை சேமிக்க முடியும்.

● ஆனால், அவை உட்கொள்ளும் மொத்த தீவனத்தில்35 -40% மேல் மக்கா சோள பூசா அளிக்கப்பட்டால் அத்துடன் 400 மி.கி அளவுக்கு தையாமின் என்ற B1 உயிர் சத்து அளிக்கப்பட வேண்டும்.

கவனம் தேவை:

● ஈரமான மக்கா சோள பூசா கொண்ட தீவனத்தை சுமார் 8-10 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது.

● இதில் கந்தக சத்து மிக அதிகம் உள்ளது. அதனால் யூரியா சேர்க்கப்பட்ட தீவனங்களை மாடுகளுக்கு அளிக்கும் பொழுது அந்த மாடுகளுக்கு அதிகப்படியாக தேவைப்படும் கந்தக சத்தை இந்த தீவனம் மூலம் ஈடுசெய்யலாம்.

● இதில் பால் உற்பத்திக்கு மிகவும் தேவைப்படும் லைசின் என்ற அமினோ அமிலம் மிக குறைவாக உள்ளதால், அதிகம் பால் தரும் மாடுகளுக்கு இந்த தீவனம் அளிக்கும் பொழுது லைசின் அமினோ அமிலம் அதிகம் உள்ள தீவனங்களை தேர்வு செய்து அளிக்க வேண்டும்.

● மக்கா சோள பூசா சற்று கசப்பு தன்மை கொண்டது அதனால் மாடுகளுக்கு இதை சிறிது சிறிதாக அளித்து பழக்க வேண்டும்.

● இதை உலரவைத்து அரைத்தால் அரைக்கப்பட்ட தீவனம் மிக மிக சிறிய துகள்களை அதிகம் கொண்டிருக்கும். இதை மாடுகள் உட்கொள்ளும் பொழுது அசை போடும் தன்மை சற்று குறைந்து விடும்.

● மாடுகளின் தீவனத்தில் இதை சேர்த்தால், சற்று நீளமாக நறுக்கப்பட்ட புற்களை இந்த தீவனத்துடன் சேர்தளிக்க வேண்டும்.

● இந்த தீவனத்தை 25% மேல் மாடுகளுக்கு அளித்தால் பாலில் கொழுப்பு சத்து குறையும்.

● தானியங்களில் இருக்கும் மாவு சத்தை மாடுகள் தீவனத்தில் சேர்ப்பதால் நார் சத்து செரிமானம் குறையும் நிலை தவிர்க்கப்படும்.

● உலர்ந்த மக்காச்சோள பூசாவில் உள்ள எரிச்சத்தின் செரிமானம் மக்காச்சோளத்தை விட குறைந்திருப்பதால் மாடுகளுக்கு உலர்ந்த மக்காச்சோள பூசாவை மக்காச்சோளத்திற்கு மாற்றாக அளித்தால் தீவனத்தை உற்பத்தியாக மாற்றும் திறன் குறையும்.

ஈரமான மக்காச்சோள பூசாவை மாடுகளுக்கு அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் :

● அதிகம் தீவனம் உட்கொள்ளல் மாடுகளின் முதல் வயிற்றில் அமில தன்மை ஏற்படாமல் தவிர்க்கும்.


மக்காச் சோள பூசாவை எவ்வளவு அளிக்க வேண்டும்?




நிலை மாறும் மாடுகளுக்கு…

கன்று ஈன 3 வாரங்கள் முன்பும், 3 வாரங்கள் பின்பும் தானியங்கள் அதிகம் கொண்ட கலப்பு தீவனம் ( Grain Mixture ) அளிக்க வேண்டும். ( உதாரணமாக உடைத்த மக்கா சோளம் - 45%, பைபாஸ் புரதம் கொண்ட பிண்ணாக்குகள் -22%, தவிடு - 15%, பருத்தி கொட்டை - 15%, தாது உப்பு -2%, சமையல் உப்பு -1%.)

இதில் தானியங்கள் அதிகம் உள்ளதால் மாடுகளில் அமில தன்மை ஏற்படாமல் தவிர்க்க இந்த பூசாவை இந்த கால கட்டத்தில் அளிக்கலாம்.


எழுத்தாளர் பற்றி




பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


Also Read

தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள் 


Comments

Post a Comment

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)