இளம் கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க தயிர் அளியுங்கள்
இளம் கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க தயிர் அளியுங்கள்
கன்றுகள் பிறந்த முதல் மூன்று மாத காலங்கள் முக்கியமானவை. பிறந்த இளம் கன்றுகளில் நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக குறைவு. கன்றுகளின் வாய் வழியே நோய் கிருமிகள் எளிதாக நுழைந்து கன்றுகளின் குடல்களில் தங்கி அவற்றிற்கு எளிதாக நோயை ஏற்படுத்துகின்றன.
இளம் கன்றுகளின் சிறு குடலில் நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளும், நலம் தரும் நுண்ணுயிர்களும் சமநிலையில் இருக்கும். இந்த சமநிலை மாறி, நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது கன்றுகளில் கழிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும். கன்றுகளில் சுமார் 42% இறப்பு கழிச்சலால் தான் ஏற்படுகின்றது.
கழிச்சல்களால் ஏற்படும் விளைவுகள்
◆ முதல் கன்று ஈனும் வயது குறையும்.
◆ இளம் கன்றுகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டால் பிறந்த இரண்டு மாதங்களில் அவை தங்கள் பிறப்பு எடையை போல இரண்டு மடங்கு உடல் எடையையும், ஆறு மாதங்களில் நான்கு மடங்கு எடையையும் கொண்டிருக்க வேண்டும்.
◆ இளம் கன்றின் வளர்ச்சியை அதிகரிக்க “ Calf starter “ எனப்படும் ஆரம்ப கால கன்று தீவனம் அளிக்கப்பட வேண்டும்.
◆ இளம் கன்றுகளில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறைந்திருக்கும்.
◆ முதலில் சீயம்பால் பிறகு தாய்ப்பாலுடன் ஆரம்ப கால கன்று தீவனம், புற்கள் என்று கன்றுகளின் தீவன பராமரிப்பு மாறிக் கொண்டே இருக்கும்.
◆ இந்த மாற்றம் கன்றுகளில் அழற்சியையும் அதன் வழியே நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாட்டையும் ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி கன்றுகளில் செரிமான குறைபாடுகள் மற்றும் செரிக்கப்பட்ட ஊட்ட சத்துக்களை உறிஞ்சும் திறனும் குறைந்து, கன்றுகளில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும்.
◆ இளம் கன்றுகளின் உடல் வளர்ச்சியை அதிகரிக்க கன்றுகளின் குடலில் தங்கியுள்ள நுண்ணுயிர் நோய் கிருமிகளை அகற்றி, நலம் தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
◆ இதன் மூலம் சிறு குடலின் ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனையும் நோய் எதிர்ப்பு சத்தியையும் ஊக்குவிக்க வேண்டும்.
◆ இதற்கு ப்ரோபையோட்டிக்ஸ் ( Probiotics ) எனப்படும் நலம் தரும் லாக்டோபேசிலஸ் (Lactobacillus) நுண்ணுயிர் கலவைகள் பயன் படுத்தப்படுகின்றன.
◆ லாக்டோபேசிலஸ் நுண்ணுயிர் கலவையில் பல வகை பாக்டீரியாக்கள் உள்ளன.
நலம் தரும் லாக்டோ பேசிலஸ் ப்ரோபையோட்டிக் நுண்ணுயிர்கள்:
◆ கன்றுகளின் சிறுகுடலில் நோயை பரப்பும் நச்சு நுண்ணுயிர்கள் ஒட்டிக்கொண்டு தங்குவதை அனுமதிக்காது .
◆ ஏற்கனவே ஒட்டிக்கொண்டு தங்கியுள்ள நுண்ணுயிர் நச்சு கிருமிகளையும் அவை வெளிப்படுத்தும் நச்சுக்களையும் செயலற்றதாக்கி, சிறுகுடலில் இருந்து வெளியேற்றும்.
இதன் மூலம் கன்றுகளுக்கு நோய் கிருமிகள் ஏற்படுத்தும் கழிச்சல் போன்ற நோய்கள் தவிர்க்கப்படுகின்றன.
ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது சத்துக்களை உறிஞ்சும் திறனை இந்த லாக்டோ பேசில்லஸ் நுண்ணுயிர்கள் அதிகப்படுத்தும். இதனால் கன்றுகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைத்து அவற்றின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு திறனை ஊக்குவிக்கும்.
கன்றுகளுக்கு அளிக்கப்படும் பாலுடன் இந்த ப்ரோபையோட்டிக் நுண்ணுயிர்களையும் ( Probiotic ) சேர்த்து அளிக்க வேண்டும்.
ப்ரோபையோட்டிக் நுண்ணுயிர்கள் பல பெயர்களில் விற்கப்படுகின்றன. ஆனால் இவைகளின் விலை அதிகமாக உள்ளதால் கன்றுகளின் தீவன பராமரிப்பில் இது மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது.
பணம் செலவின்றி இந்த ப்ரோபையோட்டிக்கை மிக எளிதாக வீட்டிலேயே உற்பத்தி செய்து கன்றுகளுக்கு அளிக்க முடியும்.
தயிர்
தயிர் சுவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்டது.
ஒரு மி.லி தயிரில் 10 எண்ணிக்கையில் லாக்டோபேசிலஸ் ஈஸ்ட் போன்ற நலம் தரும் நுண்ணுயிர்கள் உள்ளன. பால்காரிக்ஸ் லேக்ட்டிஸ் அசிடோ பிளஸ் போன்ற ஏழு வகையான நுண்ணுயிர்கள் உள்ளன.
நாம் வீட்டில் பயன்படுத்தும் தயிரிலும் ப்ரோபையோட்டிக் லாக்டோபேசிலஸ் நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் உள்ளன.
தயிரில் உள்ள லாக்டோ பாக்டீரியாக்களின் வகை நாம் பயன்படுத்தும் உறை தயிரில் இருக்கும் பாக்டீரியா வகையை பொறுத்தது. இந்த உறை தயிரில் இருக்கும் லாக்டோ பாக்டீரியாக்கள் வீட்டுக்கு வீடு மாறுபடும்.
நம் வீட்டு தயிரில் அதிக ப்ரோபையோட்டிக் திறனுடைய குறிப்பிட்ட வகை லாக்டோபேசிலஸ் பாக்டீரியாக்கள் இருந்தால் தான் ப்ரோபையோட்டிக் போல தயிர் முழுமையான பயன் தரும்.
மேலை நாடுகளில் தயிருக்கு பதிலாக யோகர்ட் ( Yoghurt ) என்ற இனிப்பு தயிரை ப்ரோபையோட்டிக் போல கன்றுகளுக்கு அளிக்கின்றனர்.
வீட்டு தயிரில் எந்த வகை லாக்டோ பாக்டீரியாக்கள் இருக்கின்றது என்பது நமக்கு தெரியாது.
யோகார்டில் சில குறிப்பிட்ட வகை லாக்டோ பாக்டீரியாக்கள் மட்டுமே பயன் படுத்தப்படுவதால் தயிரை விட யோகார்ட்டில் ப்ரோபையோட்டிக் போல பயன்படும் திறன் அதிகமாக இருக்கும்.
யோகார்டில் இருக்கும் அந்த நுண்ணுயிர்கள் கன்றுகளின் வயிற்றில் இயல்பாகவே சுரக்கும் அமிலங்களால் சிதைக்கப்படுவதில்லை.
ஆனால் வீட்டு தயிரில் இருக்கும் ப்ரோபையோட்டிக் நுண்ணுயிர்கள் அமிலங்களால் ஓரளவுக்கு சிதைக்கப்பட்டுவிடுகின்றன .அதனால் அவற்றின் ப்ரோபையோட்டிக் தன்மை சற்று குறைந்து விடுகிறது.
வீட்டு தயிரை ப்ரோபையோட்டிக்காக பயன்படுத்தும் பொழுது உறை விட்டு
12 மணி நேரம் வரை புளிக்க வைத்து பின்பு பயன்படுத்துவது சற்று கூடுதலான பயன் தரும்.
இப்படி புளிக்க வைக்கும் நேரம் குறைந்தால் அந்த தயிர் மூலம் கிடைக்கும் பயனும் குறைவாகவே இருக்கும். கன்றுகள் தாயிடம் பால் குடித்தபின் தான் இந்த தயிரை ப்ரோபையோட்டிக் போல கன்றுகளுக்கு அளிக்க வேண்டும்
தாய் இறந்தோ அல்லது தாயிடம் பால் இல்லாத காரணத்தால் புட்டியில் பால் உட்கொள்ளும் கன்றுகளுக்கு அந்த பாலுடன் தயிரை சேர்த்து அளிக்க வேண்டும்
இப்படி புளிக்க வைக்கும் நேரம் குறைந்தால் அந்த தயிர் மூலம் கிடைக்கும் பயனும் குறைவாகவே இருக்கும். கன்றுகள் தாயிடம் பால் குடித்தபின் தான் இந்த தயிரை ப்ரோபையோட்டிக் போல கன்றுகளுக்கு அளிக்க வேண்டும்
தாய் இறந்தோ அல்லது தாயிடம் பால் இல்லாத காரணத்தால் புட்டியில் பால் உட்கொள்ளும் கன்றுகளுக்கு அந்த பாலுடன் தயிரை சேர்த்து அளிக்க வேண்டும்
ஆய்வு முடிவுகள்:
ஒரு ஆய்வில் எருமைப்பாலுடன் லாக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்( Lactobacilus acidophilus ) என்ற நுண்ணுயிர் கலவையை சேர்த்து தயிர் தயாரிக்கப்பட்டது. எருமை கன்றுகளுக்கு தினமும் ஆரம்ப கலப்பு தீவனம் + இளம் புற்கள் + தாய்ப்பால் அளிக்கப்பட்டது. இத்துடன் பிற வேறு கன்றுகளுக்கு நாளொன்றுக்கு கூடுதலாக 100, 200, 300 மி.லி தயிர் அளிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் தினசரி 200 மி.லி தயிர் அளிக்கப்பட்ட கன்றுகளின் குடலில் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் ( E.coli ) எண்ணிக்கை மிகவும் குறைந்தது எனவும், நலம் தரும் லாக்டோ பாக்டீரியாக்களின் ( Lactobacteria ) எண்ணிக்கை அதிகரித்தது எனவும் அறியப்பட்டது.
பின்னொரு ஆய்வில் கிர் இன இளம் கன்றுகளுக்கு கன்று தீவனம் அளிக்கப்பட்டது. இதில் கூடுதலாக ஒரு குழு குட்டிகளுக்கு தினசரி 5 கிராம் ஈஸ்ட்டும், மற்றொரு குழு கன்றுகளுக்கு கூடுதலாக லாக்டோ பேசில்லஸ் (Lactobacillus) ப்ரோபையோட்டிகும் மற்றொரு குழு கன்றுகளுக்கு கூடுதலாக 50மிலி தயிரும் அளிக்கப்பட்டது. ஆய்வின் 90 நாட்கள் முடிவில் லாக்டோ பேசிலஸ் ப்ரோபையோடிக் அளிக்கப்பட்ட கன்றுகள் மிக அதிகமான வளர்ச்சி அடைந்தன . இதற்கு அடுத்து தயிர் அளிக்கப்பட கன்றுகளின் வளர்ச்சி இருந்தது'( 470 Vs 410 கிராம்).
மற்றொரு ஆய்வில் லாக்டோ பேசில்லஸ் அசிடோபிலஸ் ( Lactobacillus acidophillus ) என்ற ப்ரோபையோடிக் பாக்டீரியாக்கள் கொண்ட உறை தயிர் மூலம் தயாரிக்கப்பட்ட தயிர் கன்றுகளுக்கு அளிக்கப்பட்டது. கன்றுகளுக்கு ஆரம்ப கால கன்று தீவனத்துடன் பசும் தீவனம் அளிக்கப்பட்டு கூடுதலாக நாள் ஒன்றுக்கு முறையே 100, 200, 300 மி.லி தயிர் அளிக்கப்பட்டது. 90 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில் தீவனம் உட்கொண்ட அளவு அதிகரித்தது . உட்கொண்ட மொத்த தீவனத்தின் செரிமானம் அதிகரித்து .கன்றுகளுக்கு கிடைத்த மொத்த ஊட்டச்சத்துக்கள் அளவும் அதிகரித்தது.
எருமைப்பால் பசும் பால் தயிர் மற்றும் ஆட்டுப் பால் தயிர் ஒப்பீடு
ஆட்டுப்பாலில் செய்யப்பட்ட தயிரில் ப்ரோபையோட்டிக் தன்மை மிக அதிகமாகவும் எருமை பாலில் செய்யப்பட்ட தயிரில் சற்றே குறைவாகவும் மாட்டுப்பாலில் செய்யப்பட்ட பாலில் மிக குறைவாகவும் இருக்கும்.
ஆட்டுப்பால் தயிரில் நோய் தரும் பாக்டீரியாக்களுக்கு எதிரான மற்றும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் பாதிக்காத தன்மை எருமைப்பால் மற்றும் பசும் பால் தயிரை விட அதிகம் உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கட்டா ( Gadda ) இன நாட்டின மாடுகளின் பாலில் தயாரிக்க்கப்பட்ட தயிரில் இயல்பாகவே உள்ள லாக்டோபேசிலஸ் பெர்மென்டம் (Lactobacillus fermentum ) என்ற நலம் தரும் நுண்ணுயிர்கள் அப்லோடாக்ஸின் ( Aflatoxin ) என்ற பூஞ்சையின் நச்சுத்தன்மையை சிதைக்கும் தன்மை கொண்டுள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
கலப்பு தீவனம் மற்றும் பசும்புல் அளிக்கப்பட்ட பார்பாரி ( Barbari ) இன ஆடுகளுக்கு கூடுதலாக லாக்டோபாசிலஸ் அசிடோபிலஸ் ( Lactobacillus acidophilus ) ப்ரோபயோடிக் நுண்ணுயிர் கொண்ட தயிரை அளித்த பொழுது ஆடுகளில் தினசரி வளர்ச்சி, தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறன் ( Feed Efficiency ) மற்றும் தீவனங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் செரிமானம் அதிகரித்ததாக அறியப்பட்டது.
எனவே …
இளம் கன்றுகளுக்கு வழக்கமாக அளிக்கப்படும் தாய்ப்பாலுடன் சேர்த்து தினசரி 200 மி.லி தயிரை அளிக்க வேண்டும்.
ஆட்டு குட்டிகளுக்கு நாள் ஒன்றுக்கு 15 மிலி அளவிற்கு தயிரை தாய்ப்பாலுடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
தயிரை கன்றுகளுக்கு அளிக்கும் பொழுது நிதானமாக கன்றை நிற்க வைத்து தலையை நன்கு உயர்த்தி புரை ஏறாமல் அளிக்க வேண்டும்.
தயிரை சிறுது சிறிதாக அளித்து பழக்கப்படுத்தி விட்டு பின்பு பரிந்துரைக்கப்பட்ட அளவில் அளிக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
Comments
Post a Comment