`கறவை மாட்டுக்கு பால்சுரம், கீட்டோசிஸ் நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?




பால் சுரம்:


மாடுகள் சுரக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலிலும் 2.0 கிராம் சுண்ணாம்பு சத்து வெளியேறுகின்றது. மாடுகள் கன்று ஈன்ற 6 முதல் 8 வாரத்தில் அந்த ஈற்றிலேயே உச்சகட்ட அளவில் பாலை சுரக்கும் . ஈன்ற சுமார் 100 நாட்கள் வரை மாடுகளில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் மாடுகளின் உடலில் இருந்து சுண்ணாம்பு சத்து அதிகமாக வெளியேறுவதால் மாடுகளில் சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்பட்டு பால் சுரம் என்ற தன்மை ஏற்படும்.

மருத்துவத்துடன் கீழ்வரும் செயல்முறையை செய்ய வேண்டும்:


மாடுகளின் தண்ணீர் தொட்டியின் உட்புறம் சுண்ணாம்பை தடவி காய வைக்கவும். பின்பு அதில் சுத்தமான தண்ணீரை நிரப்பி அதில் இரண்டு சிட்டிகை மெக்னீசியம் சல்பேட் என்ற உப்பை சேர்த்து தண்ணீர் அளிக்கவும்.

மாடுகளில் பால் குறைய ஆரம்பித்தவுடன் இம்முறையை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம். மாடுகளுக்கு தினசரி தாது உப்பு கலவையை நாளொன்றுக்கு 30 முதல் 50 கிராம் வரை தீவனத்தில் சேர்த்து அளிக்க வேண்டும்.

இத்தன்மை வராமல் தவிர்க்க:



மாடுகள் பால் வற்றிய காலங்களில் உயிர்ச்சத்து D 25,000 யூனிட்டை ஊசி மூலம் செலுத்தி கொள்ள வேண்டும். மாடுகளுக்கு கன்று ஈன 4 வாரங்களில் இருந்து தீவனத்தில் தானிய அளவை மாடுகளின் உடல் எடையில் 0.8 சதவீத அளவுக்கு படிப்படியாக குறைப்பது, கன்று ஈன 1 – 2 வாரங்களில் இருந்து தீவனத்தில் சுண்ணாம்பு சத்தை வெகுவாக குறைத்து கன்று ஈன்ற பின் சுண்ணாம்பு சத்தை படிப்படியாக அதிகரிப்பது போன்றவற்றை கடைபிடியுங்கள்.

தானியங்கள், மர இலைகள் மற்றும் பயறுவகை பசும் தீவனங்களில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது என்பதை நினைவில் கொண்டு அதற்கேற்ப தீவன பராமரிப்பு செய்ய வேண்டும்.

மாடுகள் பால் வற்றிய காலத்தில் பொட்டாசியம் தாது அளவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு மாடுகளுக்கு நன்கு முற்றிய புல்லின் தண்டை தவிர்த்து இலைகளை மட்டும் தீவனமாக அளிக்க வேண்டும். புல் அறுவடைக்கு பின் மீண்டும் வளரும் மறுதாம்பு இலைகளில் பொட்டாசியும் சத்தின் அளவு குறைந்திருக்கும் பயறு வகை பசும் தீவனங்களை தவிருங்கள்.

கன்று ஈன்ற பின் பொட்டாசியம் தாது சத்தின் அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

கீடோசிஸ்:

இது கன்று ஈன்ற முதல் மாதத்தில் அதிகம் பால் சுரக்கும் பருவத்தில் மாடுகளில் ஏற்படுகின்றது. அதுமட்டுமின்றி கிடேரி முதல்முறையாக கன்று ஈன்றவுடன் இந்நிலை ஏற்படுகின்றது. மாவுச்சத்து குறைபாடு, கோபால்ட் அல்லது பாஸ்பரஸ் தாது குறைபாடும் இந்த நிலையை உருவாக்குகின்றது. மருத்துவத்துடன் தினசரி 6 கிராம் நியாசின் உயிர்ச்சத்து மற்றும் 5 மில்லி கிராம் பி– 12 உயிர்ச்சத்தை அளிக்க வேண்டும்.

இந்நிலை வராமல் தவிர்க்க:

பால் வற்றிய காலங்களில் மாடுகளுக்கு மிக அதிகமாக தீவனம் அளித்து அவற்றின் உடம்பில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேராமல் தீவன மேலாண்மை செய்ய வேண்டும்.

கெட்டுப்போன சைலேஜை தீவனமாக அளிக்க கூடாது. கன்று ஈன 2 முதல் 4 வாரங்களுக்கு முன்பிருந்து தினசரி நாள் ஒன்றுக்கு 6 கிராம் அளவுக்கு நியாசின் என்ற மாத்திரையை அளிக்க வேண்டும். மாடுகளின் வழக்கமான தீவனத்தை திடீரென்று மாற்றக்கூடாது.

கன்று ஈன்ற பின் மாடுகளில் பனிக்குட உறுப்பு விழாமை:

மருத்துவத்துடன் உயிர் சத்து E அதிகம் உள்ள முளைகட்டிய தானியம், சோயா மொச்சை, பருத்திக்கொட்டை போன்ற எண்ணெய் வித்துக்கள், வேலிமசால் போன்ற பயறுவகை பசும்தீவனம் அளிக்க வேண்டும்.

இந்நிலை வராமல் தவிர்க்க:

பால் வற்றிய காலத்தில் கன்று ஈன 2 முதல் 4 வாரங்களுக்கு

முன்பிருந்தாவது அனைத்து ஊட்டச்சத்துக்கள் கொண்ட தீவன பராமரிப்பு செய்ய வேண்டும்.

கால்நடை வளர்க்கும் விவசாய நண்பர்கள் மேற்கூறிய கருத்துக்களை உள்வாங்கி கால்நடை மருத்துவரின் ஆலோசனை பேரில் சரியான தீவன பராமரிப்பு செய்து மாடுகள் குணமடைவதை விரைவுப்படுத்த வேண்டும்.


எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

இளம் கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க தயிர் அளியுங்கள்

பட்டுப்புழு வளர்ப்பு கழிவுகளை தீவனமாக பயன்படுத்துவது எப்படி?





Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)