கால்நடைகளின் தீவனம் மற்றும் பூஞ்சைகளும்



 கால்நடைகளின் தீவனம் மற்றும் பூஞ்சைகளும்!

பூஞ்சை காளான்கள் என்ற சொல் நாம் அனைவரும் அறிந்ததே.
மாடுகளுக்கான தீவனத்தை தாக்கும் பூஞ்சைகள் அத்தீவனம் மூலம் மாடுகளால் உட்கொள்ளப்பட்டு மாடுகளின் உடலில் பல தீய விளைவுகளை ஏற்படுத்துவதுடன் அவை உற்பத்தி செய்யும் நஞ்சு பால் மூலம் வெளியாகி அந்த பாலை உட்கொள்ளும் மனிதர்களிலும் ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தும் என்பது நீங்கள் அறியாதது. இது குறித்த சில விவரங்களை உங்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பூஞ்சைகளால் தாக்கப்படாத ஆரோக்கியமான பாலை நீங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

உலகில் 10,000 க்கும் மேற்பட்ட பூஞ்சைகள் இருந்தாலும் மனிதர்கள், கால்நடைகள் மற்றும் கோழியினங்களின் உடலில் புகும் சுமார் 50 பூஞ்சைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் “பூஞ்சை நஞ்சுகள்” மூலம் மனிதர்கள் கால்நடைகள் மற்றும் கோழியினங்களை தாக்கும் ஆற்றல் பெற்ற்றவை.

காற்று, நீர், சுற்றுச்சூழல் மற்றும் தீவன பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளில் தான் இந்த பூஞ்சான்கள் தீவனப் பொருட்களை தாக்குகின்றன. வேளாண் பயிர்கள் களத்தில் உலரும் பொழுதும், நேர்த்தி செய்யப்படும் பொழுதும், கிடங்குகளில் சேமித்து வைக்கும் பொழுதும் கூட பூஞ்சைகளால் தாக்கப்படுகின்றன.

விவசாய நிலங்கள், காற்று, நீர் மற்றும் சுற்றுசூழலில் பரவி கிடைக்கும் பூஞ்சைகள் தனியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற வேளாண் பயிர்கள் மழை இன்றி வாடும் பொழுது அவை உற்பத்தி செய்யும் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் மேற்பரப்பில் விரிசல் ஏற்படும். இந்த விரிசலின் மூலம் உட்புகும் பூஞ்சைகள் பல்கிப் பெருகும். அந்த விளைப் பொருட்களில் இருந்து கிடைக்கும் வேளாண் கழிவுகளான / உபபொருட்ககளான உடைந்த தானியங்கள், தவிடு, பிண்ணாக்கு போன்ற தீவனப்பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்பொழுது அவை கால்நடைகளில் பூஞ்சை நஞ்சை உற்பத்தி செய்து சிக்கல்களை உண்டாக்குகின்றன.

விவசாய நிலங்கள் மற்றும் காற்று, நீர், சுற்றுச்சூழல் மூலம் பரவும் பூஞ்சைகள் “பூசாரியம்” என்ற நஞ்சையும், சேமிப்பு கிடங்குகளில் மூலம் பரவும் பூஞ்சைகள் “ஆப்லோடாக்ஸின்” மற்றும் “ஆக்ராடாக்ஸின்” நஞ்சுகளையும் உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) அறிக்கையின்படி உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தானியங்களில் சுமார் 25% பூஞ்சைகளால் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட தட்ப வெப்ப நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் ஆஸ்பிரிஜில்லஸ் என்ற பூஞ்சை ஆப்லோடாக்ஸின் நஞ்சை உற்பத்தி செய்யும். இந்த பூஞ்சை நமது நாட்டில் வெகுவாக பரவி உள்ளது. இந்த நஞ்சில் B1, B2,  G1, G2 என்ற நான்கு வகைகள் உள்ளன. இதில் B1 நஞ்சு தான் வெகுவாக உள்ளது. கால்நடைகளுக்கான கலப்பு தீவனத்தில் நாம் சேர்க்கும் மக்காச்சோளம் ஆப்லோடாக்ஸின் பூஞ்சை நஞ்சால் வெகுவாக பாதிக்கப்படுகின்றது.

கால்நடைகளில் பூஞ்சை நஞ்சுக்களால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் அந்த கால்நடையில் எந்தெந்த பூஞ்சை நஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதையும் அதை தவிர கால்நடைகளில் உற்பத்தி ஆகும் நஞ்சுக்கள் இடையே ஏற்படும் செயல்பாடுகள் மற்றும் பிரதானமாக எந்த நஞ்சு எந்த அளவில் உள்ளது என்பதையும் பாதிக்கப்பட்ட மாடுகளின் ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் தட்ப வெப்ப நிலையையும் பொறுத்தது.

பூஞ்சை நஞ்சுக்களால் கால்நடைகள் மற்றும் மனிதர்களில் உண்டாகும் பிரச்சனைகளின் தீவிரத்தை குறைக்க ஒவ்வொரு நாடும் தீவனப்பொருட்கள், பால் போன்றவற்றில் பூஞ்சைகள் இல்லாதவாறும் அப்படியே இருந்தாலும் அவை அதிகபட்சமாக எந்த அளவு வரை இருக்கவேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்துள்ளன. அப்படி நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்கு மேல் பூஞ்சை நஞ்சு இருந்தால் அந்த தீவனப் பொருட்கள், பால் போன்றவற்றை உபயோகிப்பது தடை செய்யப்படுகின்றன.

பூஞ்சை நஞ்சு வகை

விவரம்

அதிகப்படியாக இருக்கவேண்டிய நஞ்சு அளவு

ஆப்லோடாக்ஸின் B1

பால் பொருட்கள்

20 ppb

ஆப்லோடாக்ஸின் B1

பால் 

5 ppb

சாராளினோன்

மாடுகள் மற்றும் கன்றுகள் தீவனம்


0.5 ppm

பியூமோனிஸின் B1,B2

மாடுகள் தீவனம்

கன்றுகள் தீவனம்

50 ppm

20 ppm

டீஆக்சிநிவலினால்

மாடுகள் தீவனம்

கன்றுகள் தீவனம்

5 ppm

2 ppm



2019ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இருந்து பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில் தான் அதிக அளவில் பூஞ்சையின் தாக்கம் இருந்ததாக அறியப்பட்டது.

கால்நடைகளின் தீவனத்தில் B1, B2, G1, G2- என்ற நான்கு வகையான பூஞ்சை நஞ்சுகள் காணப்படுகின்றன. பொதுவாக பசும் தீவனங்களில் பூஞ்சை நஞ்சுகள் இருக்காது. ஆனால், பசும்தீவனங்களை ஈரப்பதத்துடன் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் அதில் பூஞ்சை வளரும். பெங்களூருவில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் கால்நடை தீவனத்தில் சேர்க்க கூடிய மக்கா சோளம், தானியம் மற்றும் தானிய உபபொருட்களான அரிசிப்பாலிஷ், கோதுமை தவிடு, எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு போன்றவற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் சுமார் 88% மாதிரிகள் பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டிருந்தன.

அதே போல எண்ணெய் வித்துக்களான சோயா மொச்சை, சூரியகாந்தி விதைகள், சோயா பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு, சோயா பிண்ணாக்கு போன்றவற்றின் மாதிரிகளில் சுமார் 96% பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டிருந்தன. கால்நடைகளுக்கான கலப்பு தீவனங்களை ஆய்வு செய்ததில் பூஞ்சை நஞ்சு அவற்றில் 68ppb வரை இருந்தது கண்டறியப்பட்டது .

இந்த பூஞ்சைகளை சூடேற்றி அழிக்க முடியாது எனவே வெப்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அடர் குச்சி தீவனங்களில் பூஞ்சைகள் வளராது என்ற நம்பிக்கை தவறானது.

தீவனம் மூலம் கால்நடைகள் உட்கொண்ட B1 பூஞ்சை நஞ்சு சுமார் 12 மணிநேரத்தில் M1 நஞ்சாக மாறி பாலிலும், சிறுநீரிலும் வெளியேற ஆரம்பிக்கின்றது. B1 நஞ்சு M1 நஞ்சை விட அதிக நச்சு தன்மை கொண்டது. தீவனம்மூலம் உட்கொண்ட நஞ்சு 24 மணி நேரத்தில் பாலில் உச்ச அளவில் இருக்கும். மாடுகள் தீவனம் மூலம் உட்கொண்ட நஞ்சு சுமார் 4 நாட்களில் மாட்டின் உடலில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடும். இந்தியாவின் தர கட்டுப்பாட்டு அமைப்பு 1000 கிலோ கால்நடை தீவனத்தில் அதிக அளவாக 20 மிகி வரை மட்டுமே பூஞ்சை நஞ்சு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.



எழுத்தாளர் பற்றி



பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

அரிசி தவிடை பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்

கோதுமை  தவிடு  பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்





Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)