கறவை மாடுகளின் உற்பத்திக்கேற்ப தரமான பிண்ணாக்குகளை தேர்ந்தெடுத்து வாங்கி தீவன செலவை குறையுங்கள்
கடலைப் பிண்ணாக்கு:
◆ கடலை கொட்டையில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்ட பின் கிடைக்கும் கழிவே கடலை பிண்ணாக்கு.◆ பூஞ்சையால் பாதிக்கப்படாத கடலை பிண்ணாக்கு கால்நடைகளுக்கு மிக சிறந்த புரதச்சத்து தீவனம்
◆ இதில் உலர் நிலை அடிப்படையில் புரதச்சத்து சுமார் 50-55% உள்ளது.
◆ இதில் மெத்தியோனின் மற்றும் ட்ரிப்டோபேன் என்ற அமினோ அமிலங்கள் மிக மிக குறைவாகவும் லைசின் அமினோ அமிலம் ஓரளவு குறைவாகவும் உள்ளன.
◆ இதில் செரிக்க கூடிய புரதச்சத்து 46%, மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 80% உள்ளன.
◆ பிண்ணாக்கில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 5180 கிலோ கலோரிகள் உள்ளன.
◆ இந்த எரிச்சத்து 81% வரை செரிக்க கூடியது.
◆ இதில் உள்ள மொத்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து 65% ,பால் உற்பத்திக்கு பயன்படும் எரிச்சத்து 42%,வளர்ச்சிக்கு பயன்படும் எரிச்சத்து 41% உள்ளன.
◆ இந்த கடலை பிண்ணாக்கு மாடுகளில் 63% வரை செரிக்கும். இதில் உள்ள மொத்த பாஸ்பரஸ் சத்தில் 60% வரை பைட்டேட் பாஸ்பரஸ் கலவை.
◆ செக்கில் ஆட்டப்பட்ட பிண்ணாக்கில் 10-12%, இரசாயனம் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டால் எண்ணையின் அளவு 0.7- 0.8% எண்ணெய் இருக்கும்.
◆ இதில் புரதத்தின் செரிமானத்தை குறைக்கும் Trypsin Inhibitor என்ற இரசாயனம் உள்ளது. ஆனால் நிலக்கடலை செக்கில் ஆடப்படும் பொழுது உண்டாகும் வெப்பத்தில் இந்த இரசாயனம் செயல் இழக்க வைக்கப்படுகின்றது.
◆ தாது சத்துக்களை பொறுத்தமட்டில் சுண்ணாம்புச் சத்து மிக குறைவாகவும், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.
◆ இதில் உள்ள புரதம் பொதுவாக சுமார் 80% வரை மாடுகளில் செரிக்கப்படுகின்றது.
◆ இதில் உள்ள மொத்த புரதம் மாடுகளின் முதல் வயிற்றில் சுமார் 75% வரை கரையக்கூடியது (RDP) .
◆ செக்கில் பிண்ணாக்கு ஆட்டப்படும் பொழுது வெப்பம் உண்டாகும். இந்த வெப்பம் மாடுகளின் முதல் வயிற்றில் புரதச்சத்து கரையும் திறனை குறைத்து அதன் மூலம் RDP- ஐ ஓரளவு குறைத்து UDP அளவை அதிகப்படுத்தும்.
◆ பிண்ணாக்குகளில் UDP உள்ள அளவை அதிகரிக்க அதை பார்மாலிடிஐடு (Formaaldehyde) என்ற இரசாயனத்துடன் சேர்த்து நேர்த்தி செய்ய வேண்டும்.
◆ கறவை மாடுகளின் தீவனத்தில் சேர்க்கும் அளவு 25 - 30%
கலப்படம் :
◆ முத்துக்கொட்டையின் மேல் தோல் கலப்படமாக சேர்க்கப்படுகின்றது.◆ சைலேஜ் முறையில் பதப்படுத்தப்பட்ட புல்லை உட்கொள்ளும் மாடுகள் மற்றும் வெப்ப அழற்சியால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு இந்த பிண்ணாக்கு ஏற்றது .
◆ கன்றுகளுக்கான ஆரம்ப கால தீவனமான Calf starter ல் சேர்க்கப்படும் மீன் தூளுக்கு பதிலாக இந்த பிண்ணாக்கை பயன்படுத்தலாம்.
◆ மேய்ச்சல் மூலம் வளர்க்கப்படும் கிடாரிகளுக்கு மேய்ச்சல் முடிந்ததும் சூபாபுல் இலைகளுடன் இந்த பிண்ணாக்கை சேர்த்து அளித்தால் கிடாரி கன்றுகளில் உடல் எடை நன்கு கூடும் என்று ஒரு ஆய்வில் பதிவிடப்பட்டுள்ளது.
◆ இதில் சுண்ணாம்பு சத்து மிக குறைவாக உள்ளது. அதனால் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பயறுவகை பசும் தீவனங்கள், தீவன மரங்களின் இலைகள் போன்றவற்றை சேர்த்து அளிக்க வேண்டும் அல்லது கிளிஞ்சல் சுண்ணாம்பை வல்லுனர்களின் ஆலோசனை படி தேவையான அளவில் தீவனத்தில் சேர்த்து சுண்ணாம்புச் சத்தின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
◆ மாடுகள் கன்று ஈன இரண்டு வாரங்கள் முன்பிருந்து கன்று ஈனும் வரை அவற்றிற்கான மொத்த தீவனத்தில் சுண்ணாம்பு சத்தின் அளவை குறைத்து தீவனம் இட வேண்டும். அந்த சமயத்தில் தீவனத்தில் சேர்க்க இந்த பிண்ணாக்கு ஏற்றது.
◆ கடலை பிண்ணாக்கில் ஈரப்பதம் சற்று அதிகம் இருந்தாலே பூஞ்சை வெகு சுலபமாக இதில் வளரும். இந்த பிண்ணாக்கை வாங்கும் முன்பு அதை உடைத்துப் பார்க்க வேண்டும். பூஞ்சை வளர்ந்திருந்தால் பிண்ணாக்கின் உட்புறம் வெண்மை நிறத்தில் அது படர்ந்திருக்கும். சிறிதளவு வாயில் போட்டு மென்றால் அது கசப்பாக இருக்கும். இப்படி பூஞ்சை படர்ந்த பிண்ணாக்கை வாங்க கூடாது.
◆ கடலை பிண்ணாக்கில் சால்மொனல்லா (Salmonalla) என்ற பாக்டீரியா எளிதாக வளரக்கூடியது. சால்மொனல்லா இருக்கும் தீவனத்தை கால்நடைகள் உட்கொண்டால் குறிப்பாக கன்றுகளில் கழிச்சல் ஏற்படும்.
◆ நேர்த்தி செய்யப்படாத இந்த பிண்ணாக்கின் புரதச்சத்தில் RDP 75% வரை உள்ளதால் ஓரளவு பால் கொடுக்கும் மாடுகளுக்கு இதை தீவனமாக அளிக்கலாம். ஆனால் 15 லிட்டருக்கு மேல் பால் கொடுக்கும் மாடுகளுக்கு இந்த பிண்ணாக்கில் உள்ள புரதம் ஏற்றதல்ல. அதிகம் பால் கொடுக்கும் மாடுகளுக்கு UDP அதிகம் உள்ள பிண்ணாக்குகள் தேவை.
◆ நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பிண்ணாக்குகளும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் செரிமானத்திறன் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் பிற தீவனங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பிண்ணாக்குகளை தேர்வு செய்ய வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
Comments
Post a Comment