மாடுகளுக்கு கழிவு செய்யப்பட்ட காய்கறிகளை அளித்து தீவன செலவை குறையுங்கள்
- காய்கறிகள் விளையும் இடங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பும் பொழுது விற்பனைக்கு தகுதியற்ற காய்கறிகள் , போக்குவரத்தில் சேதமாகும் காய்கறிகள் ,மொத்த மற்றும் சில்லறை கடைகளில் விற்பனை ஆகாத காய்கறிகள் சில காய்கறிகளின் இலை பகுதி போன்றவை கழிவாக கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகள் சுற்றுச் சூழலுக்கு பெருமளவு குந்தகம் விளைவிக்கின்றன.
- சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மட்டும் மாதத்திற்கு 70 டன்னுக்கு மேல் காய்கறிகள் சேதமடைகின்றன.
- இப்படி கிடைக்கும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு பசும் தீவனத்திற்கு மாற்றாக ஓரளவு பயன் படுத்தி தீவன செலவை குறைக்க முடியும்.
- இப்படி கழிக்கப்படும் காய்கறிகளில் உள்ள ஊட்ட சத்துக்களில் புரத சத்து7.0 – 15.0 % வரையும், நார் சத்து 8-16%வரையும், சாம்பல் சத்து10.0-20.05 வரையும் , கரையும் மாவு சத்து 40.0-50.0 % வரையும் இருக்கும்
ஊட்ட சத்துக்களின் அளவில் மாற்றங்கள்:
- கழிக்கப்படும் காய்கறிகளில் இருக்கும் காய்கறி வகைகளை பொறுத்து மொத்த கழிவுக் கலவையின் ஊட்ட சத்துக்கள் மாறுபடுகின்றன.
- காய்கறி கழிவில் உள்ள ஊட்ட சத்துக்கள் பருவ காலங்களை பொறுத்தும் மாறுபடும்.
தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்:
- கழிக்கப்பட்ட காய்கறிகளை ஆடு மாடுகள் உட்கொள்வதால் எந்தவித பிரச்சினைகளும் பொதுவாக ஏற்படாது .
- ஆனால் அசுத்தமான மண் தரையில் கொட்டப்படும் இந்த கழிவுகளில் குறிப்பாக பழக்கழிவுகளில் E .coli மற்றும் Entero bacteria நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் இருக்கும் .
- இந்த பாக்டீரியாக்கள் மாடுகளின் உணவுப்பாதையில் தங்கி கழிச்சல் மற்றும் பல நோய்களை உருவாக்கும்.
- பல காய்கறிகளின் சாகுபடியில் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவையும் மாடுகளில் பல பிரச்சினைகளை உண்டாக்கும் .
- அதனால் இந்த நோய் கிருமிகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் முழுமையாக அகலும் வகையில் காய்கறி கழிவுகளை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்
ஈரம் போக உலரவையுங்கள்:
- தண்ணீரில் கழுவப்பட்ட ஈரமான கழிவுகளை மாடுகள் உட்கொள்ளாது.
- அதனால் தண்ணீரில் கழுவப்பட்ட காய்கறி கழிவுகளை சாய் தளத்தில் சற்று உலர வைக்கலாம்.
- அல்லது அவற்றை நன்கு பரப்பி அதன் மேல் நன்கு உலர்ந்த வைக்கோலை போட்டு மூடிவைத்தால், கழிவுகளின் மேல் இருக்கும் ஈரத்தை வைக்கோல் உறிஞ்சிவிடும். இப்பொழுது கழிவுகளின் மேல் இருக்கும் ஈரப்பதம் மாடுகள் உட்கொள்ளக்கூடிய அளவுக்கு குறைந்துவிடும் .
- காய்கறி கழிவுகளை பெரிய அளவில் பயன்படுத்த நினைப்பவர்கள் இக்கழிவுகளை சிறுக வெட்டி சோலார் டிரையர் ( Solar Drier ) சாதனம் கொண்டு நன்கு உலரவைத்து, அரைத்து கலப்பு தீவனத்தில் சேர்த்து பயன்படுத்தலாம்
சுவை குறைந்திருந்தால் ….
- காய்கறி கழிவுகளை மாடுகள் உட்கொள்ளாவிட்டால் அதன் மேல் 1% சமையல் உப்பு கரைசலை தெளித்து அளித்தால் மாடுகள் அதை உட்கொள்ளும்
- காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு முதலில் சிறிது சிறிதாக அளித்து பழக்க வேண்டும்
சைலேஜ் செய்யுங்கள்:
- காய்கறி கழிவுகளில் இயல்பாகவே ஈரப்பதம் அதிகம் ( 83 –96% ) உள்ளதால் இதை சேமித்து வைத்து மாடுகளுக்கு தீவனமாக அளிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது.
- அதனால் இந்த கழிவுகளை உலரவைப்பதை விட சைலஜாக பதப்படுத்துவது எளிது.
- இந்த காய்கறி கழிவுகளை வைக்கோல், தவிடு போன்றவற்றுடன் கலந்தால் சைலேஜ் செய்வதற்கு தகுந்த ஈரப்பதம் இந்த கலவையில் இருக்கும் .
- உதாரணமாக 83 –96% ஈரப்பதம் கொண்ட காய்கறி கழிவு 3 பங்கை
- 10% ஈரப்பதம் கொண்ட வைக்கோல் அல்லது தவிடு 1 பங்குடன் சேர்த்தால், இந்த கலவையின் ஈரப்பதம் சைலேஜ் செய்ய ஏற்ற 40-45% அளவுக்கு குறைந்துவிடும் .
- இத்துடன் வழக்கம் போல வெல்லப்பாகு மற்றும் சமையல் உப்பு சேர்த்து தரமான சைலேஜ் தயாரிக்க முடியும்
- சில காய்கறி கழிவுகளில், உதாரணமாக சுரைக்காய் ,தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றில் தண்ணீரின் அளவு மிக அதிகமாக இருக்கும் .
- அதனால் ஒரு மாடு சுமார் 20 கிலோ சுரைக்காய் உட்கொண்டால் அதன் மூலம் 18 –19 கிலோ அளவு தண்ணீரை தான் அந்த மாடு பெற்றிருக்கும்
- தண்ணீரால் மாட்டின் வயிறு நிரம்பினால் மாடுகள் உட்கொள்ள வேண்டிய சத்து மிக்க பிற தீவனங்களை உட்கொள்ளமுடியாது .
- அதனால் நீங்கள் மாட்டுக்கு அளிக்கும் கழிவு செய்யப்பட்ட காய்கறி கலவையில் எந்த வகையான காய்கறிகள் உள்ளன என்பதை பொறுத்து தான் அதன் பயன்பாடு இருக்கும்
முட்டை கோசு மற்றும் காலி பிளவர்:
• முட்டை கோசு மற்றும் காலி பிளவர் கழிவுகளை மாடுகள் விரும்பி உட்கொள்ளும்
• ஒரு ஆய்வில் முட்டை கோசு மற்றும் காலி பிளவர் கழிவு கலவையை பாரா புல்லுக்கு மாற்றாக அளித்தபொழுது ஆடுகள் அதை நன்கு உட்கொண்டாலும் அது பாரா புல்லை மட்டும் உட்கொண்ட அளவை விட குறைவாகவே இருந்தது.
பூசணி காய் கழிவு:
• ஒரு ஆய்வில் முட்டை கோசு மற்றும் காலி பிளவர் கழிவு கலவையை பாரா புல்லுக்கு மாற்றாக அளித்தபொழுது ஆடுகள் அதை நன்கு உட்கொண்டாலும் அது பாரா புல்லை மட்டும் உட்கொண்ட அளவை விட குறைவாகவே இருந்தது.
முட்டை கோசு - _காலி பிளவர் இலை சைலேஜ் :
- முட்டைகோசு மற்றும் காலிபிளவர் இலை கழிவுகளை 3:1 என்ற விகிதத்தில் கலந்து தண்ணீரில் கழுவி சாய்வான தளத்தில் பரப்பி தண்ணீர் வடியவி டவேண்டும்.
- இத்துடன் பிற தீவனங்களை கீழ் கண்ட ஒரு கலவையில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து சைலேஜ் செய்யலாம்
- முட்டைகோசு - காலிபிளவர் இலை கலவை + வெல்லப்பாகு +தவிடு
(85:5:10). - முட்டைகோசு – காலிபிளவர் இலை கலவை +,வெல்லப்பாகு +அரிசிபாலிஸ் (85:5:10)
- முட்டைகோசு - காலிபிளவர் இலை கலவை +,வெல்லப்பாகு + வைக்கோல் . (85:5:10)
- ஒரு ஆய்வில் முட்டை கோசு மற்றும் காலி பிளவர் இலை கலவை கொண்ட சைலேஜ் மக்கா சோள சைலேஜுடன் ஒப்பிடப்பட்டது .
- மக்காசோள சைலேஜை விட ,முட்டைகோசு – காலிபிளவர் இலை கலவை +வெல்லப்பாகு +வைக்கோல் சைலேஜ் 100% அல்லது முட்டைகோசு – காலிபிளவர் இலை கலவை +வெல்லப்பாகு+ வைக்கோல் சைலேஜ்50%+மக்காசோள சைலேஜ்50% தீவனம் உட்கொண்ட ஆடுகளில் வளர்ச்சி மற்றும் தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறன் அதிகம் இருந்ததாக அறியப்பட்டது .
கேரட் :
- மாடுகளுக்கு கழிவு செய்யப்பட்ட கேரட்டை நல்ல தீவனமாக பயன்படுத்த முடியும் .
- விரயமான கேரட்டை மாடுகள் சுமார் 20 - 25 கிலோ வரை உட்கொள்ளும்.
- இதில் சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் மாடுகளுக்கு தீவனமாக அளிக்கும் சமயம் நார் சத்து மிகுந்த பிற தீவனங்களை சேர்த்து அளிக்க வேண்டும் .
- கேரட்டில் உள்ள அதிக சர்க்கரை காரணமாக , மாடுகளிகளின் வயிற்றில் அமில தன்மை ஏற்படாமல் இருக்க கேரட்டை சிறிது சிறிதாக 8-10 நாட்களுக்கு அளித்து பழக்க வேண்டும்.
- அல்லது இத்துடன் சமையல் சோடா மாவை 30-50 கிராம் சேர்த்து அளித்தால் அமிலத்தன்மை பிரச்னையை தவிர்க்கமுடியும் .
- கேரட்டில் உயிர் சத்து A அதிகம் உள்ளதால் இதை நீண்ட நாட்கள் உட்கொள்ளும் மாடுகளின் பாலின் கொழுப்பு மற்றும் அதன் மூலம் பெறப்படும் நெய் நல்ல மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.
- தினசரி 8—10 கிலோ அளவு கேரட்டை உட்கொள்ளும் மாடுகளில் இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகளை ஓரளவு தவிர்க்கமுடியும் .
- கன்று ஈனும் இடைவெளி 167–185 நாட்களில் இருந்து 110–171 நாட்கள் என்ற அளவில் குறைவதாகவும்,
- சினை பிடிக்க தேவையான செயற்கை முறை கருவூட்டல்களின் எண்ணிக்கை 1.8–2.7 இருந்து 1.0–1.8 ஆக குறைவதாகவும்
- பால் உற்பத்தியிலோ அல்லது பாலில் உள்ள கொழுப்பு சத்திலோ எந்த வித மாறுதலும் இருக்காது எனவும் ஆய்வுகள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது .
- வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 2-4 கிலோ வரை கேரட்டை அளிக்கலாம் . கலப்பு தீவனம் மற்றும் விரயமான கேரட் சேர்ந்த தீவனம் மாடுகளின் மொத்த தீவனத்தில் 50% மேல் இது இருக்கக்கூடாது .
கேரட் இலைகள்:
- கேரட் இலைகளில் 11-12% வரை புரத சத்தும்., 17% நார் சத்தும்,18% சாம்பல் சத்தும் உள்ளன .கேரட் இலைகளில் சுண்ணாம்பு சத்து 2.0% மும் பாஸ்பரஸ் சத்து 0.45%மும் உள்ளன..
- இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் ஆடு மாடுகளில் சுமார் 77% வரையும் குறிப்பாக புரதம் 62%வரையும் செரிக்கப்படுகின்றது.
- இதன் இலைகளில் செரிக்கக்கூடிய புரதம் 7.5% மும் மொத்த செரிமான ஊட்ட சத்து க்களின் அளவு சுமார்73 % வரையும் உள்ளது
- ஒரு ஆய்வில் உலர வைக்கப்பட்ட இந்த இலைகளை பயறுவகை பசும் தீவனத்திற்கு பதிலாக 50%அளவுக்கு அளித்தபொழுது ஆடுகள் உட்கொண்ட மொத்த தீவன செரிமான தன்மை அதிகரித்ததாக பதியப்பட்டுள்ளது
சுரைக்காய் கழிவு :
- சாறு எடுக்கப்பட்ட பின் கிடைக்கும் கழிவில் சுமார் 24%புரதம் உள்ளது. இந்த கழிவை நன்கு உலரவைத்து ஆடுகளின் கலப்பு தீவனத்தில் 50% வரை சேர்க்கமுடியும்
வெள்ளரிக்காய்:
- இதில் புரதம் ,கொழுப்பு,NDF நார் ,ADF நார் மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 16.3,1.3,16.8,2.5 11.3 % உள்ளன.
- ஒரு ஆய்வில் கலப்பு தீவனத்தில் சேர்க்கப்பட்ட பார்லி தானியத்த்திற்கு பதில் உலர்ந்த வெள்ளரிக்காயை அளித்தபொழுது மொத்த தீவனத் தின் செரிமானம் குறையவில்லை என்றாலும் மாடுகளின் முதல் வயிற்றில் பாலில் கொழுப்பு சத்தை சேர்க்கும் அசிடிக் அமிலம் ( Acetic Acid ) குறைந்து விடுவதாகவும் அதே சமயம் வளர்ச்சியை அதிகரிக்கும் ப்ரோபயோனிக்( Propionic Acid ) அமில அளவு அதிகரிப்பதாகவும் அறியப்பப்பட்டது .
- அதே போல வெள்ளாடுகளின் கலப்பு தீவனத்தில் சேர்க்கப்பட்ட 35% தானியத்தில் 7% அளவு வெள்ளரிக்காய் அளித்தபொழுது பால் உற்பத்தி அதிகரித்தது
வெள்ளரிக்காயின் வெளி தோலில் புரத சத்து14.3% கரையும் மாவு சத்து55% மற்றும் கொழுப்பு சத்து 3.0% வரை உள்ளது - பச்சை பட்டாணி : பச்சை பட்டாணி உறிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் பொழுது மிக சிறிய அளவிலான மற்றும் உடைந்த பச்சை பட்டாணி பருப்புகள் கழிவாக கிடைக்கின்றன.
- இந்த பட்டாணி பருப்பு கழிவில் புரதம் 29% ,நார் 15% ,கொழுப்பு 3.0% மற்றும் சாம்பல் சத்து4.3% உள்ளன .
- இந்த கழிவை பயறுவகை பசும் தீவனத்துடன் கலந்து தீவனமாக அளிக்கும் பொழுது அந்த கலவையில் செரிக்கக்கூடிய புரத சத்து21.5% மும் மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள்78% வரை இருக்கும்.
- இந்த பட்டாணி கழிவை மாடுகள் மிக விரும்பி உட்கொள்ளும் . உலரவைத்த பட்டாணி பருப்பு கழிவை பின்கறவை பருவத்தில் உள்ள கறவை மாடுகளுக்கான கலப்பு தீவனத்தில் பிண்ணாக்கிற்கு பதிலாக சுமார் 25%வரை சேர்க்கலாம் .
பட்டாணி காயின் வெளி தோல் :
- இதில் புரத சத்து 20% மும் அந்த புரதச்சத்தில் மாடுகளின் முதல் வயிற்றில் செரிக்கும் புரதம் 70% மும் சிறுகுடலில் ( Bypass ) செரிக்கும் புரதம் 30% மும் உள்ளது .
- இதில் கொழுப்பு,NDF நார் ADF நார் மற்றும் செல்லுலோஸ் நார் முறையே 0.95, 48.0 ,35.38, 23.08 % உள்ளன. இதை மாடுகள் விரும்பி உட்கொள்ளும்.
- இது மாடுகளுக்கு நல்ல தீவனம் ஆகும்
பூசணி காய் கழிவு:
- பூசணிக்காய் மாவு சத்து நிறைந்தது. பூசணி காயில் 15% புரத சத்து மற்றும் 4.0% கொழுப்பு சத்து உள்ளது. இது 73% வரை செரிக்கக்கூடியது .
- இதில்மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 85% உள்ளன .
- சுமார் 700 கிலோ பூசணிகாய் கழிவை 300 கிலோ வைக்கோலுடன் சேர்த்து 10 கிலோ யூரியா மற்றும் 50 கிலோ வெல்ல பாகுடன் கலந்து சைலேஜ் செய்து 8 மாத வயதுக்கு மேற்பட்ட கிடாரிகளுக்கான தழை தீவனத்தில் புல்லுக்கு மாற்றாக 60% வரை அளித்தால் கிடாரிகள் உட்கொள்ளும் மொத்த தீவனம் ,கிடாரிகளின் வளர்ச்சி மற்றும் தீவனத்தை வளர்ச்சியாகும் திறனில் எந்த மாற்றமும் ஏற்படாது.
- பூசணிக்காய் மாவு சத்து நிறைந்தது. பூசணி காயில் 15% புரத சத்து மற்றும் 4.0% கொழுப்பு சத்து உள்ளது. இது 73% வரை செரிக்கக்கூடியது .
- இதில்மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 85% உள்ளன .
- சுமார் 700 கிலோ பூசணிகாய் கழிவை 300 கிலோ வைக்கோலுடன் சேர்த்து 10 கிலோ யூரியா மற்றும் 50 கிலோ வெல்ல பாகுடன் கலந்து சைலேஜ் செய்து 8 மாத வயதுக்கு மேற்பட்ட கிடாரிகளுக்கான தழை தீவனத்தில் புல்லுக்கு மாற்றாக 60% வரை அளித்தால் கிடாரிகள் உட்கொள்ளும் மொத்த தீவனம் ,கிடாரிகளின் வளர்ச்சி மற்றும் தீவனத்தை வளர்ச்சியாகும் திறனில் எந்த மாற்றமும் ஏற்படாது.
மாடுகளுக்கு காய்கறி கழிவை அளிக்கும்பொழுது கவனிக்க வேண்டியவை:
- காய்கறி கழிவுகள் கொண்ட தீவனம் மாடுகளுக்கான முழுமையான தீவனம் அல்ல வழக்கமான தீவனத்துடன் இதை சேர்த்தளித்து தீவன செலவை சற்று குறைக்கலாம்
- காய்கறி கழிவுகளை நன்கு தண்ணீரில் கழுவி ஈரம் போக சற்று உலர வைக்க வேண்டும்
- மாடுகளுக்கு வழக்கமாக அளிக்கும் தீவனங்களை முதலில் அளித்துவிட்டு கடைசியில் காய்கறி கழிவுகளை அளிக்க வேண்டும்
- கெட்டுப்போன காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு அளிக்க கூடாது
- சற்று பெரிய காய்கறிகள் தொண்டையில் அடைத்து க்கொள்ள வாய்ப்பு உள்ளதால் காய்கறிகளை சிறுக நறுக்க வேண்டும்
- நறுக்கப்பட்ட காய்கறிகளின் சத்துக்கள் விரைவில் மாற்றத்திற்கு உள்ளாவதால் காய்கறி கழிவுகளை எவ்வளவு விரைவில் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அளிக்க வேண்டும்
- காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு முதலில் சிறிது சிறிதாக அளித்து பழக்கப் படுத்த வேண்டும்
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
Thank you sir
ReplyDelete