அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 1
கறவை மாடுகளில் பொதுவாக பால் உற்பத்தி நன்கு இருக்கும். அதற்கு சரியான பராமரிப்பு மற்றும் சரியான தீவன மேலாண்மை கடைபிடிப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட காலங்களில் மாடுகளில் பால் உற்பத்தி குறையும். இது மாடுகளில் முன்கறவை காலம் , மத்தியகறவை காலம், பின்கறவை காலம் நடப்பதாகும். இந்த மூன்று காலத்திற்கு ஏற்றாற்போல தீவன பராமரிப்பு இருக்க வேண்டும். மாட்டின் பால் உற்பத்தி குறையும் காலங்கள் பற்றியும் மற்றும் அச்சமயத்தில் என்ன தீவன வழிமுறை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றியும் அடுத்து விரிவாக பார்க்கலாம்.
மேலும், இது பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவ ஆலோசனைக்கு+91 63837 17150 இல் அழைக்கவும்.
- 1-100 நாட்கள் வரை முன்கறவை காலம்
- 100-200 நாட்கள் வரை மத்திய கறவை காலம்
- 200-305 நாட்கள் பின் கறவை காலம்
- 305-325 நாட்கள் வரை பால் வற்றிய காலம்
- 50% முன் கறவை காலத்திலும்,
- 30-40% மத்திய கறவை காலத்திலும் ,
- 10-20%பின்கறவை காலத்திலும் கிடைக்கும்.
- பொதுவாக மாடுகள் கன்று ஈன்று 170 நாட்கள் வரை பால் சுரப்பு அதிகமாக இருப்பதால் இந்த காலகட்டத்தில் தான் கால்நடை வளர்ப்போருக்கு பால் விற்பனை மூலம் அதிகமாக வருமானம் கிடைக்கும்.
- பால் சுரப்பு இயல்பாகவே 170-250 நாட்களில் குறைந்துவிடும். இந்த கால கட்டத்தில் பால் மூலம் கிடைக்கும் வருமானம் தீவன செலவுக்கு இணையாக இருக்கும். 250-305 நாட்கள் வரை பால் சுரப்பு மிகவும் குறைந்துவிடும்.
- அதனால் பால் விற்பனையில் இலாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்படும். இது இயல்பான நிகழ்வு. இதில் பராமரிப்பு மூலம் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்த முடியாது.
மாடுகளின் முன்கறவை காலம்:
- மாடுகள் பால் கொடுக்கும் 1-100 நாட்கள் வரை முன்கறவை காலம் எனப்படுகின்றது.
- ஈத்தின் மொத்த பால் உற்பத்தியில் சுமார் 50% இந்த காலகட்டத்தில் கிடைக்கின்றது.
- மாடுகள் கன்று ஈன்ற முதல் 3-4 நாட்கள் சீயம் பாலை சுரக்கின்றன. பின்பு பால் தெளிவடைந்து இயல்பான பாலை சுரக்கின்றன.
- கன்று ஈன்ற முதல் நாளில் இருந்து பால் சுரப்பு தினசரி அதிகரித்து சுமார் 6-8 வாரங்களில் அந்த ஈத்திலேயே மிக அதிக பட்ச பாலை தினசரி உற்பத்தி செய்கின்றன.
- பால் உற்பத்தி அதிகபட்சம் ஒருசில வாரங்கள் வரை நீடிக்கும் பின் இயல்பாகவே குறைய ஆரம்பிக்கும். இந்த குறைபாடு மாதத்திற்கு சுமார் 6-9% இருக்கும்.
- உச்ச அளவு பால் உற்பத்தி முடிந்து பால் இயல்பாகவே குறையும் காலங்களில் என்னதான் தீவனம் கொடுத்தாலும் பால் உற்பத்தியை மீண்டும் அதிகரிக்க முடியாது.
- மாடுகள் கன்று ஈன்றவுடன் தினசரி அதிகரிக்கும் பால் சுரப்பு சரியான அளவில் நிதானமாக அதிகரித்து உச்சகட்ட சுரப்பை அடையவேண்டும்.
- பால் சுரப்பு குறைவான நாட்களில் விரைவாக உச்சகட்ட பால் சுரப்பை அடைந்தால் ,பால் சுரப்பு குறைவும் இயல்பை விட வேகமாக இருக்கும். அதுமட்டுமின்றி மாடுகள் கொடுக்கும் மொத்த பாலின் அளவும் குறைந்துவிடும்.
- மாடுகளின் உச்சகட்ட பால் உற்பத்தி அளவை பொறுத்தே அந்த ஈத்தில் மொத்த பால் உற்பத்தியும் அமையும்.
- தீவன பராமரிப்பு மற்றும் பொது பராமரிப்பு மூலம் உச்சகட்ட பால் உற்பத்தியை எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகரிக்கும் வகையில் செய்யவேண்டும்.
- உச்ச கட்ட பால் உற்பத்தியை ஒரு லிட்டர் அதிகரித்தால் அந்த ஈத்தில் சுமார் 200 லிட்டர் பாலை அதிகம் பெறமுடியும்.
இவை அனைத்தும் மாட்டிற்கு முன்கறவை காலங்களில் ஏற்படக்கூடியவை. இந்த முன்கரவை காலத்தில் மாடுகளுக்கு தோற்றத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.மேலும் உடனடி இலவ சமருத்துவ ஆலோசனைக்கு +91 63837 17150< இல் அழைக்கவும்.




Comments
Post a Comment