மாம்பழக் கழிவுகளை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாமா?

  



நமது நாட்டில் உற்பத்தியாகும் மொத்த மாம்பழத்தில் சுமார் 5% தமிழ் நாட்டில் விளைகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 4,00,000 டன் மாம்பழம் விளைகின்றது.

இதில் சுமார் 6,000 டன் அளவு 54 மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுகின்றன. இதில் 46 தொழிற்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளன. மீதம் உள்ள தொழிற்சாலைகள் தருமபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ளன.


தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மாம்பழ சீசன் இருக்கும். இந்த சமயத்தில் மண்டிகளில் அதிகம் பழுத்து, மக்கள் உண்ணுவதற்கு ஏற்பு அல்லாத மாம்பழங்கள், மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் மாம்பழத் தோல், மாம்பழ கொட்டை போன்றவை கழிவுகளாக வீணடிக்கப்படுகின்றன. இவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியுமா என்பது பற்றி விளக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம் .

கழிவு செய்யப்படும் மாம்பழம்:

கழிவு செய்யப்படும் மாம்பழத்தை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாமா?

அளிக்கலாம். மாம்பழத்தில் சுமார் 80% வரை ஈரப்பதம் இருக்கும். மாம்பழத்தில் உலர் நிலையில் புரதம் 4.7% , நார் 14.6% மற்றும் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 17.9 மெகா ஜூல் அளவுக்கு உள்ளது.

மாம்பழத்தில் இருக்கும் மொத்த எரிச்சத்தின் அளவு ஏறத்தாழ அரிசி அரிசித்தவிடு, உருளை கிழங்கு, தேங்காய் பிண்ணாக்கு போன்றவற்றுக்கு இணையான அளவிலும் மக்காச்சோள ஸ்டார்ச், குச்சிக்கிழங்கு ஸ்டார்ச், மொலாசஸ் எனப்படும் வெல்லப்பாகு கழிவை விட அதிகமாக உள்ளது . மாம்பழத்தை அதன் சர்க்கரை சத்து மூலம் கிடைக்கும் எரிச்சத்திற்காகவும், நார்ச்சத்திற்காகவும் தான் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்க வேண்டும்.


மாம்பழத்தின் மொத்த எடையில் சுமார் 13-15% அளவு சர்க்கரை சத்து இருக்கும். சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் மாடுகள் விரும்பி உட்கொள்ளும். சுமார் 350-400 கிலோ எடை கொண்ட கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 5-6 கிலோ வரை பழுத்த மாம்பழத்தை பிற தீவனங்களுடன் சேர்த்தளிக்கலாம்.


மாடுகள் இதை அதிகம் உட்கொண்டால் …..

அவற்றின் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படும். அமிலத்தன்மையை தவிர்க்க மாட்டுக்கு நாளொன்றுக்கு 60-80 கிராம் சமையல் சோடா மாவை இரண்டு பாகமாக பிரித்து காலை மற்றும் மாலையில் பிற தீவனங்களுடன் சேர்த்து அளிக்க வேண்டும்.

மாடுகள் அசை போடுவது குறைந்துவிடும்.

மாடுகளின் வயிற்றில் சிறிது ஆல்கஹால் உற்பத்தி ஆவதால் மாடுகள் சற்று மயக்கமுடன் இருக்கும்.

மாம்பழத்தில் எரிச்சத்து அதிகமாகவும், புரதச்சத்து மிக குறைவாகவும் உள்ளதால் இத்துடன் புரதச்சத்து அதிகம் உள்ள பிண்ணாக்குகளை தாது உப்புடன் சேர்த்து அளிக்க வேண்டும்.

எந்த காரணம் கொண்டும் மாடுகள் மாம்பழத்தை அப்படியே உட்கொள்ள அனுமதிக்காதீர்கள். மாம்பழ கொட்டை மாடுகளின் தொண்டையில் சிக்கி பிரச்சினைகள் ஏற்படும்.

மாம்பழங்களை மாடுகளுக்கு அளிப்பது பற்றிய ஆய்வுகள் அதிகம் இல்லை. ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கு 100 கிலோ மொத்த தீவனத்தில் 42 கிலோ மாம்பழம் சேர்த்து அளிக்கப்பட்டது. அதாவது உலர் நிலையில் மொத்த தீவனத்தில் 10-12% வரை அளிக்கப்பட்டது.

ஆய்வு முடிவில் மாம்பழம் அளிக்கப்பட்ட மாடுகளில் பால் உற்பத்தி 23% வரை அதிகம் இருந்தது.

எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

கால்நடை தீவனத்தில் பூஞ்சைகள் வளர்வதை தடுக்கும் முறைகள்

மக்காச்சோள தவிடை தீவனமாக பயன்படுத்தி மாடுகளில் தீவன செலவை குறையுங்கள்  



Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)