அறுவடை செய்த உழுந்து செடியை கொடுத்தால் பால் உற்பத்தி அதிகரிக்குமா?

  


உளுந்து சாகுபடியில் கழிவாக கிடைப்பவற்றை சேமித்து வைத்து  சரியான முறையில் தீவனமாக அளித்தால் கோடையில் தீவன பற்றாக்குறையை ஓரளவு சமாளித்து தீவன செலவையும் குறைக்கலாம்.

உளுந்து செடியை அறுவடைக்கு பின், உலர வைத்து தட்டி உளுந்து தனியே பிரிக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் உலர்ந்த உளுந்து இலைகள் சிறிய தண்டு பகுதி மற்றும் உளுந்து காயின் தோல் போன்றவை வேளாண் கழிவுகளாக கொண்ட கலவை கிடைக்கிறது.



◆ இந்த கலவை நல்ல சுவை கொண்டதாகவும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது சத்துக்கள் கொண்டதாகவும் உள்ளது. இதில் உள்ள எரிச்சத்தின் அளவு வைக்கோலுக்கு ஈடானதாக உள்ளது. இந்த கலவையில் புரதச்சத்து சுமார் 13% இருக்கும். இதில் உள்ள புரதச்சத்து கோதுமை தவிட்டுக்கு இணையான  அளவில் உள்ளது. இந்த கலவை மாடுகளில் சுமார் 60% வரை செரிமானம் அடைகின்றது.

◆ இதில் செரிக்க கூடிய புரதம் 43%, மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 40% உள்ளன. ஆனால் இதை மட்டுமே கறவை மாடுகளுக்கு தீவனமாக அளிக்க கூடாது. அப்படி அளித்தால் மாடுகளில் புரதம் மற்றும் எரிச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பால் உற்பத்தி குறையும்.

◆ தாது சத்துக்களை பொறுத்தவரை  இந்த உலர்ந்த உளுந்து செடிகளில் சுண்ணாம்பு சத்து மிக அதிகமாகவும், பாஸ்பரஸ் சத்து மிக குறைவாகவும் உள்ளது. எனவே, இதை மட்டுமே  தீவனமாக அளித்தால் மாடுகளில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை ஏற்படும். இதை தவிர்க்க  கால்சியம்- டை - பாஸ்பேட் என்ற தாது உப்பை சேர்க்க வேண்டும். 



◆ இது கிடைக்கவில்லை என்றால் மாடுகள் விரும்பி உண்ணக்கூடிய அகத்தி, சூபாபுல், கிளரிசிடியா, வாகை போன்ற மரங்களின் இலைகளை நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 கிலோ வரை அளிக்கலாம். மர  இலைகளில் சுண்ணாம்பு சத்து மிகுந்துள்ளது. இத்துடன் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்ட தானியங்கள் மற்றும் தவிட்டையும் சேர்த்து அளிக்க வேண்டும்.

◆ குறைந்த அளவு பால் கொடுக்கும் மாடுகளுக்கு உலர்ந்த உளுந்து செடியுடன் சரிபாதி அளவில் தவிடு மற்றும் தாது உப்பு சேர்த்து அளித்தால் பால் உற்பத்தி சற்று அதிகமாகும்.

◆ உளுந்து அறுவடைக்கு பின் கிடைக்கும் உலர்ந்த இலைகளில் புரதச்சத்து சுமார்  15% உள்ளது. தவிட்டுடன் ஒப்பிட்டால்  உளுந்து உலர்ந்த இலைகளில் கோதுமை தவிட்டுக்கு இணையான அளவில் புரதச்சத்தும் சற்றே அதிக அளவில் நார் சத்தும் உள்ளன.

◆ மாடுகளுக்கு கலப்புத் தீவனத்தில் தவிட்டுக்கு பதில் உலர்ந்த உளுந்து  இலைகளை முழுவதுமாக சேர்க்கலாம். உதாரணமாக நீங்கள் மாட்டுக்கு மக்கா சோளம்- 25 %, கோதுமை தவிடு-42%, பிண்ணாக்கு-30%, தாது உப்பு- 2%, சமையல் உப்பு-1% கொண்ட கலப்பு தீவனம் அளித்தால் அதில் கோதுமை தவிட்டுக்கு பதில உலர்ந்த உளுந்து இலைகளை கலந்து மக்கா சோளம்- 25%, உலர்ந்த உளுந்து இலைகள்-42%, பிண்ணாக்கு-30%, தாது உப்பு- 2%, சமையல் உப்பு-1 % கொண்ட கலப்பு தீவனம் தயாரித்து அளிக்கலாம். இதன் மூலம் தவிட்டுக்கான தீவன செலவை முழுவதுமாக தவிர்க்கலாம்.

◆ கலப்பு தீவனத்தில் கோதுமை தவிட்டுக்கு பதில் உலர்ந்த உளுந்து இலைகளை அளித்தால் மாடுகள் உட்கொண்ட மொத்த தீவன அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது. அத்துடன் மாடுகள் உட்கொள்ளும் மொத்த தீவனத்தின் செரிமான தன்மை எவ்விதத்திலும் குறையாது. மொத்த செரிமான ஊட்ட சத்துக்களின் அளவும் அதிகரிக்கும்.

◆ ஒரு ஆய்வில் தினசரி 6 முதல் 7 கிலோ பால் கொடுக்கும். மாடுகளுக்கு கோதுமை தவிட்டுக்கு பதில் உலர்ந்த உளுந்து இலைகளை சேர்த்த கலப்பு தீவனத்துடன் வைக்கோல் அளித்து தீவனம் இட்டதில்  மாடுகள் அளிக்கும் பாலின் அளவிலோ, பாலின் தன்மையிலோ எந்த மாற்றமும்  ஏற்படவில்லை. இந்த தொழில் நுட்பத்தை நீங்கள் கோடையில் பயன்படுத்தினால் வீணாகும் உளுந்து இலைகள் தீவனமாக பயன்படுவதுடன் கோதுமை தவிட்டை முழுமையாக தவிர்த்து தீவன செலவை பெருமளவு குறைக்கலாம்.




◆ செம்மறி ஆடுகளுக்கான மொத்த தீவனத்தில் சுமார் 60% வரை உலர்ந்த உளுந்து செடியை தீவனமாக அளிக்கலாம். 

◆ ஒரு ஆய்வில்  சுமார் 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகளுக்கு  நாளொன்றுக்கு 750 கிராம் உலர்ந்த உளுந்து செடிகளை கலப்பு தீவனத்துடன் சேர்த்து அளித்த பொழுது ஆடுகள் தினசரி  60  கிராம் வரை எடை கூடின.

◆ தீவனத்தை உடல் எடையாக மாற்றும் திறனில் உலர்ந்த உளுந்து செடி கோதுமை வைக்கோலுக்கு ஈடாக உள்ளது. 

◆ உலர்ந்த உளுந்து செடியை வைக்கோலுடன் சேர்த்து  எருமை கன்றுகளுக்கு தீவனம் இட்டால் கன்றுகளில் ஓரளவு உடல் வளர்ச்சியை பெற முடியும்.

◆ எனவே, உளுந்து அறுவடைக்கு பின் கிடைக்கும் கழிவுகளை முறையாக தீவனமாக பயன்படுத்தி கால்நடைகளில் தீவன செலவை குறைக்க முடியும்.


எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

இளம் கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க தயிர் அளியுங்கள்






Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)