மாடுகளின் உடல்நலம் குறைந்த காலங்களில் தீவனப் பராமரிப்பு எப்படி செய்ய வேண்டும்?
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் மாடுகளுக்கு உடல் நலம் குறைந்தால் கால்நடை மருத்துவத்துடன் கூடுதலாக சரியான தீவன பராமரிப்பை செய்தால் மாடுகள் விரைவில் குணமடையும். நோய் தடுப்பூசிகள் மூலம் முழுமையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாடுகளின் உடலில் உருவாக்க வேண்டுமெனில் அவைகளுக்கு சரியான தீவன பராமரிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பால் உற்பத்தி மற்றும் சினைகாலம் போன்றவற்றிற்கு ஏற்ப ஊட்டச்சத்தினை அளிக்காவிடில் மாடுகளில் உற்பத்தி தொடர்பான உடல் நல கோளாறுகள்
( Metabolic Diseases ) ஏற்படும்.
மாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அதை எப்படி அறிந்து கொள்வது?
◆ பண்ணையில் உள்ள மொத்த மாடுகளின் எண்ணிக்கையில் சுமார் 15% , 20 % மாடுகளில் பால் உற்பத்தி சம்பந்தமான உடல் நல குறைப்பாட்டு தன்மைகள்
( Metabolic Diseases ) ஏற்படும்.
◆ மாடுகளில் அடிக்கடி நோய் தாக்கமும் தடுப்பூசிகளால் குறைந்த பலன் மட்டுமே கிடைக்கும்
◆ மாடுகளில் சினை அறிகுறிகள் சரி வர தெரியாது.
◆ பாலில் கொழுப்புச்சத்தின் அளவு சராசரி அளவை விட 0.3% குறைந்தாலோ/அதிகரித்தாலோ
◆ புரதச்சத்து அளவு 0.2% குறைந்தாலோ/அதிகரித்தாலோ
◆ மாடுகளில் பால் உற்பத்தி திடீரென குறைந்தாலோ
◆ மாடுகள் கன்று ஈன்ற ஆறு முதல் எட்டு வார காலத்தில் உச்சகட்ட பால் சுரப்பை அடையாதிருந்தாலோ
◆ அம்மாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்று அறிந்து அதற்கேற்றவாறு தீவன பராமரிப்பை சரி செய்ய வேண்டும்.
◆ ஒரு மாடு உடல்நலம் குன்றி மருத்துவம் செய்து கொள்ள வரும் பொழுது பொதுவாக புரதம், மற்றும் எரிச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே இம்மாடுகளுக்கு புரதம், எரிச்சத்து மற்றும் தாது சத்து கொண்ட தீவனத்தை அளிக்க வேண்டும். பொதுவாகவே உடல் நலம் குன்றி இருக்கும் மாடுகளுக்கு ஊட்டச்சத்து தேவை அதிகமாக இருக்கும்.
◆ உடல் நலம் குன்றி மருத்துவம் அளிக்கப்படும் மாடுகளுக்கு ஊட்டச்சத்து கொண்ட தீவனத்தை அளித்தும் அம்மாட்டின் உடல் நலம் மேம்படவில்லை என்றால் அத்தீவனத்தில் உள்ள ஊட்டச் சத்துக்களின் அளவை சற்று மேலும் அதிகரிக்க வேண்டும்.
◆ மாடுகளில் உடல் நலம் குன்றினால் முதலில் அவை தீவனம் உட்கொள்வது படி படியாக குறைவதுடன் அசை போடுவதும் குறைந்துவிடும் . மாடுகள் ஒரு வாரம் பட்டினி இருந்தால் அம்மாடுகளின் முதல் வயிற்றில் தீவனத்தை செரிக்கும் நுண்ணுயிரிகள் முழுவதும் அழிந்துவிடும் .இதனால் மாடுகளின் நிலை இன்னும் மோசமாகும். எனவே மாடுகளை நீண்ட நாட்கள் பட்டினியாக விடக் கூடாது.
பசி இன்மை:
◆ பசி குறைந்த காலங்களில் சுலபமாக செரிக்க கூடிய தீவனத்தை உதாரணமாக சிறுக சிறுக வெட்டிய இளம் புல் + தானிய கஞ்சியுடன் சிறிதளவு சமையல் சோடாமாவு மற்றும் நாள் ஒன்றுக்கு 30 - 50 கிராம் அளவு தாது உப்பு கலவையை சேர்த்து அளிக்க வேண்டும்.◆ மாடுகளுக்கு வழக்கமாக அளிக்கும் தீவனத்தை அளித்த பிறகும் அம்மாடுகளில் பசி அதிகரிக்கவில்லை எனில் அவற்றின் தீவனத்தில் பல்வேறு வகையான புதிய தீவனத்தை சேர்க்க வேண்டும். உதாரணமாக வழக்கமாக அளிக்கப்படும் புல் வகைக்கு பதில் புதிய புல் வகைகளையும் வழக்கமான கலப்பு தீவனத்திற்கு பதில் வேறு கம்பெனியின் தீவனத்தை சிறிது சிறிதாக சேர்த்து அளிக்க வேண்டும். இத்துடன் சிறிதளவு வெல்லம் அல்லது கருப்பட்டியை சேர்த்து அளிக்கலாம்.
◆ உடல் நலம் குன்றிய மாடுகளுக்கு அளிக்கும் தீவனத்தை 5 முதல் 6 பங்காக பிரித்து சிறிது சிறிதாக அளிக்க வேண்டும்.
◆ பசி குறைந்த உடல் நலம் குன்றிய மாடுகளுக்கு நல்ல சைலேஜ் அல்லது ஈரமான மதுபான கழிவை அளித்தால் பசி அதிகரிக்கும். இத்துடன் நாள் ஒன்றுக்கு 3 முதல் 6 கிராம் அளவுக்கு ஆஸ்பிரிஜில்ஸ் ஒரைசா என்ற ஈஸ்ட் மாத்திரையை 5 முதல் 10 நாட்களுக்கு அளிக்க வேண்டும்.
◆ கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் புற்கள் நிறைந்திருந்தால் அதில் மேய விட வேண்டும். மேய்ச்சல் நிலங்களில் பல்வேறு வகையான புல் பூண்டுகள் இருப்பதால் அவைகளுக்கு கிடைக்கும் மேய்ச்சலில் சுவை அதிகரிக்கும்.
◆ உங்கள் பண்ணையில் நல்ல உடல் நலத்துடன் அசை போடும் மாடு இருந்தால் அவை அசை போடும் பொழுது அதன் வயிற்றில் இருந்து தீவனம் உருண்டை வடிவில் வயிற்றில் இருந்து வாய்க்கு வரும். அதை மாடுகள் அசை போட்டு மீண்டும் விழுங்கும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் தீவன உருண்டை வாயிக்கு வந்தவுடன் வாயை திறந்து நாக்கை விரல்களால் அழுத்தி தீவன உருண்டைகளை மாட்டின் வாயில் இருந்து எடுங்கள். அதை மூடியுடன் உள்ள பாத்திரத்தில் இட்டு மாட்டின் உடல் வெப்பநிலைக்கு வெதுவெதுப்பான நீரை சேர்த்து சுத்தமான கைகளால் நன்கு அலச வேண்டும். பின்பு அதை சுத்தமான துணியில் வடிகட்டி அந்த வடிநீரை தீவனம் உட்கொள்ளாமல் இருக்கும் மாட்டுக்கு குடிக்க அளிக்க வேண்டும். இதுபோல நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறைகள் செய்தால் அம்மாடுகளில் நுண்ணுயிரிகளின் அளவு மீண்டும் அதிகரித்து செரிமானமும் அதிகரிக்கும்.
இம்முறையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை:
◆ தீவன உருண்டைகளை நீண்ட நேரம் காற்றாட விடக்கூடாது. அதை விரைவாக பாத்திரத்தில் போட்டு மூடி விட வேண்டும். எந்த மாட்டின் வாயில் இருந்து தீவன உருண்டைகளை எடுகின்றீர்களோ அந்த மாட்டுக்கு நீங்கள் அளிக்கும் அதே தீவனத்தை தான் உடல் நலம் குன்றிய மாடுகளுக்கும் அளிக்க வேண்டும்.◆ தீவன உருண்டை வடிநீரை உடல் நலம் குன்றிய மாட்டுக்கு அளிக்கும் சமயம் மாட்டை நிற்க வைத்து புரை ஏறாமல் மிக கவனமாக வாயில் ஊற்ற வேண்டும்.
◆ இத்துடன் விரைவில் செரிக்கக்கூடிய வகையில் கஞ்சியுடன் சமையல் சோடா மாவு கலவையை சிறிய சிறிய அளவில் “பி காம்ப்லெக்ஸ்" மாத்திரைகளுடன் பல முறைகள் அளிக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
Comments
Post a Comment