மாட்டுத் தீவனத்தில் பிண்ணாக்கு அவசியமா?



பிண்ணாக்குகள்:

◆ எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பின்பு கிடைக்கும் உபபொருள் தான் பிண்ணாக்கு.

◆ எண்ணெய் வித்துக்களை அழுத்தம் கொடுத்து ( Expeller ) அதிலிருந்து எண்ணெய் பிரித்து எடுக்கப்படுகின்றது. இது தவிர எண்ணையை கரைத்தெடுக்கும் இரசாயனங்களை (Solvant Extraction ) பயன்படுத்தி எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

◆ இந்த இரசாயன முறை 30%க்கும் குறைவான எண்ணெய் கொண்ட வித்துக்களில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றது.

அழுத்தம் கொடுத்து தயாராகும் ( Expeller ) பிண்ணாக்கு:

எண்ணெய் வித்துக்கள் எண்ணைய்க்காக செக்கில் இருவகைகளாக தயாரிக்கப்படுகின்றது.

1. வெப்பம் உண்டாகும் முறை

2. குளிர் ஊட்டும் முறை முறை .

வெப்பம் உண்டாகும் முறை:

வெப்பம் உண்டாகும் முறையில் பிண்ணாக்கின் புரதச்சத்தின் ஒரு பகுதி கூடுதலாக “பைபாஸ் புரதமாக” மாற்றப்படுகின்றது.

அத்துடன் எண்ணெய் வித்துக்களில் இருக்கும் ஊட்டச்சத்து எதிர் செயலிகள் செயல் இழக்க செய்யப்படுகின்றன.

ஆனால் வெப்பத்தால் சில உயிர்ச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

குளிர் ஊட்டும் முறை:

வெப்பம் ஏற்படாமல் குளிர்ந்த முறையில் எண்ணெய் பிரித்தெடுக்கும் பொழுது கிடைக்கும் பிண்ணாக்கில் பைபாஸ் புரதம் அதில் இயல்பாகவே இருக்கும் அளவில் மட்டுமே இருக்கும் .

அதே சமயம் உயிர்ச்சத்துக்கள் அழிக்கப்படுவதில்லை.

அதனால் செக்கில் வெப்பம் ஏற்படும் வகையில் எண்ணெய் பிரித்தெடுக்கும் பொழுது கிடைக்கும் பிண்ணாக்கே மாடுகளுக்கு உகந்தது. நமது நாட்டில் வெப்பம் உண்டாகும் முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றது.

பிண்ணாக்குகள் தீவனத்தில் எதற்காக சேர்க்க வேண்டும்?

◆ பிண்ணாக்குகள் அவற்றில் உள்ள அதிக புரதச்சத்துக்களுக்காக கால்நடை தீவனத்தில் சேர்க்கப்படுகின்றன.

◆ புரதச்சத்து என்பது அமினோ அமிலங்களால் ஆனது. அவற்றில் லைசின் மற்றும் மெத்தியோனின் என்ற இரண்டு அமினோ அமிலங்கள் பால் உற்பத்திக்கு மிகமிக அவசியம். இந்த அமினோ அமிலங்கள் குறைந்த அளவு இருந்தால் பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும். பிண்ணாக்கில் இந்த இரு அமினோ அமிலங்கள் இருக்கும் அளவு மற்றும் அவை மாடுகளின் பால் உற்பத்திக்கு கிடைக்கும் அளவை பொறுத்து ( Bio availability ) கறவை மாடுகளின் தீவனத்தில் இந்த பிண்ணாக்கின் பயன் இருக்கும்.

◆ எண்ணெய் வித்துக்களில் உள்ள புரதச்சத்து சுமார் 75 -90 சதவீதம் வரை செரிமான தன்மை கொண்டது.

◆ மாடுகளுக்கு இருவகை புரதச்சத்து தேவை

◆ பிண்ணாக்கில் இருக்கும் புரதச்சத்து இருவகைகளாக இருக்கும்.

◆ மாடுகளின் முதல் வயிற்றில் நுண்ணுயிரிகளால் செரிக்கப்படும் புரதம் (RDP) ஒரு இரகம்.

◆ முதல் வயிற்றில் நுண்ணுயிரிகளால் செரிக்கப்படாமல் சிறுகுடலில் நொதிகளால் செரிக்கப்படும் புரதம் (UDP) மற்றொரு இரகம். இந்த புரதமே “பைபாஸ் புரதம் “எனப்படுகின்றது.

◆ மாடுகளுக்கு அளிக்கப்படும் புரதத்தில் RDP மற்றும் UDP இடையே உள்ள விகிதம் 60:40 அளவில் இருக்க வேண்டும்.

பிண்ணாக்குடன் மாவுச்சத்து தீவனங்களை சேர்க்க வேண்டும்:

மாடுகளுக்கு பிண்ணாக்கு மூலம் அளிக்கப்படும் புரதச்சத்து முதல் வயிற்றில் விரைவாகவும், அதிக அளவிலும் கரையும் தன்மை கொண்டிருந்தால் அந்த புரதத்தை அம்மாடுகளின் முதல் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் பயன்படுத்திக்கொள்ள எதுவாக விரைவில் செரிக்கக்கூடிய மாவுச் சத்து நிறைந்த தீவனங்களை சேர்த்து அளிக்க வேண்டும். இல்லையென்றால் பிண்ணாக்கு மூலம் அளிக்கப்பட்ட புரதச்சத்து மாடுகளுக்கு பயன்படாமல் விரயமாகும்.

பிண்ணாக்கும் அதில் உள்ள எண்ணெய் பசையும்

◆ செக்கில் எண்ணெய் வித்துக்கள் ஆட்டப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பிண்ணாக்கில் எண்ணையின் அளவு சற்று அதிகமாக இருக்கும்.

◆ இந்த எண்ணெய் பிண்ணாக்கில் உள்ள எரிச்சத்தின் அளவை அதிகரிக்கும்.

◆ பிண்ணாக்கில் எண்ணெய் அளவு மிக அதிகமாக இருந்தால், அது காற்றில் உள்ள ஈரத்தை உறுஞ்சி Rancidity என்ற இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகி கெட்டுவிடும். இதனால் பிண்ணாக்கின் ஊட்டச்சத்தின் தரம் தாழ்ந்து விடும். அதனால் செக்கில் ஆட்டப்பட்ட பிண்ணாக்கை கோடையில் 5-6 வாரங்களுக்கு மேலும், குளிர் காலங்களில் 8-12 மேல் வாரங்களுக்கு மேலும் சேமித்து வைக்க கூடாது.

◆ பிண்ணாக்கில் எண்ணெய் பசை அளவு அதிகமானால் அது மாடுகளின் முதல் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிர்களை அழித்து விடும். இதனால் புற்களில் இருக்கும் நார்ச்சத்தின் செரிமான அளவு குறைந்து விடும்.

◆ இரசாயனம் மூலம் பிண்ணாக்கில் உள்ள எண்ணெய் அறவே நீக்கப்பட்ட பிண்ணாக்கை நீங்கள் பயன்படுத்தினால், கூடுதலாக எண்ணெய் வித்துக்களை தீவனத்தில் சேர்த்து அளிக்க வேண்டும். இதன் மூலம் எண்ணெய் நீக்கப்பட்டதால் ஏற்படும் எரிச்சத்து பற்றாக்குறையை 
ஈடு செய்யலாம்.

◆ கறவை மாடுகளின் மொத்த தீவனத்தில் 6%க்கு மேற்படாமல் எண்ணெய் பசை (கொழுப்பு ) இருக்க வேண்டும்.

பிண்ணாக்கில் தாது சத்துக்கள் :

◆ பிண்ணாக்குகளில் பைட்டிக் அமிலம் பொதுவாக காணப்படுகின்றது. இது பிண்ணாக்கில் உள்ள சுண்ணாம்பு, பாஸ்பரஸ் சத்துக்களுடன் சேர்ந்து பெய்டின் ( Phytin ) என்ற கலவையாக இருப்பதால் இந்த இரண்டு தாதுக்களும் கால்நடைகளுக்கு கிடைப்பது குறைந்து விடும்.

◆ ஆனால் மாடுகளின் முதல் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளால் இந்த பெய்டின் சிதைக்கப்படுவதால் மாடுகளுக்கு இந்த இரண்டு தாதுக்களும் கிடைப்பதில் ( Bio availability ) சிக்கல் இருக்காது.

◆ ஆனால் கன்றுகளில் சரியான அளவில் முதல் வயிறு வளர்ச்சி அடையாததால் கன்றுகளுக்கு இந்த தாதுக்கள் கிடைப்பது சற்று சிரமம்.

◆ பிண்ணாக்குகளில் உயிர்ச்சத்துக்களான D, B குறைவாகவும் இருக்கும்.

பிண்ணாக்கும் பூஞ்சைகளும்:

◆ நம் நாட்டின் தட்பவெப்ப நிலை எண்ணெய் வித்துக்கள் பயிரில் இருக்கும் பொழுதும் அவை அறுவடை செய்யப்பட்டு குடோனிகளில் சேமித்து வைக்கும் பொழுதும் அவற்றில் பூஞ்சை வளர சாதகமாக உள்ளது. இந்த எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு உபபொருளாக  கிடைக்கும் பிண்ணாக்குகளில் அந்த பூஞ்சை தங்கி மேலும் வளர வாய்ப்புள்ளது.

◆ எண்ணெய் வித்துக்களை நல்ல முறையில் காய வைத்து அவற்றில் உள்ள ஈரப்பதத்தை 10% அளவுக்கு குறைக்க வேண்டும். எண்ணெய் வித்துக்களில் இருக்கும் தண்ணீர் அளவிற்கும் அந்த தண்ணீரின் செயல்பாட்டிற்கும் ( Water Activity ) உள்ள விகிதம் 0.6 மேல் இருந்தால் அந்த எண்ணெய் வித்தில் பூஞ்சை வளர சாதகமான சூழல் ஏற்படும்.

◆ பொதுவாக நிலக்கடலை, பருத்திக் கொட்டை, தேங்காய், பாம் எண்ணெய் கொட்டை போன்றவற்றில் இருக்கும் தண்ணீர் அளவிற்கும் அந்த தண்ணீரின் செயல்பாட்டிற்கும் ( Water Activity ) உள்ள விகிதம் 0.6 மேல் இருப்பதால் இவற்றில் பூஞ்சைகள் வளர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை தவிர்க்க எண்ணெய் வித்துக்களில் உள்ள ஈரப்பதம் 10% மேல் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

◆ மாடுகளின் தீவனத்தில் ஒரே பிண்ணாக்கை மட்டுமே சேர்க்காமல் இரண்டுக்கு மேற்பட்ட பிண்ணாக்குகளை சேர்க்க வேண்டும்.

◆ நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பிண்ணாக்குகளும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் செரிமானத்திறன் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் பிற தீவனங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பிண்ணாக்குகளை தேர்வு செய்ய வேண்டும்.

எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க







Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)