மரவள்ளிக்கிழங்கு சாகுபடியுடன் கறவை மாடுகளை இணையுங்கள் - பகுதி 3
மரவள்ளி இலை சைலேஜை மாடுகளுக்கு அளித்தால் ஏற்படும் நன்மைகள்
- ஒரு ஆய்வில் பசும் புல்லுடன் தினமும் 3 –4 கிலோ மரவள்ளி இலை சைலேஜை கலப்பு தீவனத்துடன் அளித்த பொழுது மாடுகள் 8 கிலோ வரை பால் அளித்தன
- மற்றொரு ஆய்வில் மாடுகளுக்கு புல்லையும் மரவள்ளி சைலேஜையும் தனித்தனியே அளித்தபொழுது மாடுகள் புல்லை விட மரவள்ளி சைலேஜை விரும்பி அதிகம் உட்கொண்டன
- மாடுகளுக்கு இந்த சைலேஜை கூடுதலாக அளித்த பொழுது தினசரி பால் உற்பத்தி 12.4 கிலோவிலிருந்து 13.2 கிலோவாக அதிகரித்ததாகவும் தெரியவந்தது. இது மற்றுமின்றி பாலில் கொழுப்பு சத்தும் SNF ம் சற்று அதிகரித்தது
- மாடுகள் மற்றும் இன்றி ஆடுகளுக்கும் மரவள்ளி சைலேஜ் நல்ல தீவனம் ஆகும் ஆடு மாடுகளுக்கு அவற்றின் உடல் எடையில் சுமார் 3% வரை மரவள்ளி சைலேஜ் அளிக்கலாம்
- கால்நடைகள் இதை உண்ண பழகுவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஒரு வார காலம் வரை இதை சிறிது சிறிதாக கொடுத்து பழக்குவது நல்லது.
- ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கு தினசரி மரவள்ளி இலை சைலேஜ் கூடுதலாக அளித்த சமயம் பால் உற்பத்தி பாலில் கொழுப்பு SNF சத்துக்கள் அதிகரித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன:
மரவள்ளி கிழங்கு தோல்:
- மரவள்ளி கிழங்கு தோல் வேளாண்கழிவாக கிடைக்கின்றது. இது நார் சத்து மற்றும் எரிச்சத்து நிரம்பிய கழிவாகும் . இந்த கிழங்கு தோலில் புரத சத்து மிகக்குறைவாகவும் (4 -5% ) நார் சத்து ஓரளவும்( 12% ) உள்ளன. இந்த கிழங்கு தோல் சுமார் 55 – 60% வரை செரிக்க கூடியது .ஆனால் இதை ஆடு மாடுகளுக்கு அப்படியே தீவனமாக அளிக்க கூடாது.இதை நன்கு உலரவைத்து பின்பே தீவனமாக அளிக்கவேண்டும்.
- இத்துடன் ஆடு மாடுகளின் முதல் மற்றும் சிறுகுடலில் செரிக்கும் புரத சத்து, கந்தக தாது, பாஸ்பரஸ் தாதுச்சத்துக்களுடன் உயிர் சத்து” பி “காம்ப்லெஸ் இணைத்து கூடுதலாக அளிக்கவேண்டும். இவை அனைத்தும் மதுபான ஆலை கழிவில் உள்ளன. இதற்காக உலர்ந்த கிழங்கு தோலை மதுபான ஆலை கழிவுடன் சேர்த்து அளித்தால் மேற்கூறிய தாது மற்றும் புரதச்சத்து ஆடு மாடுக கிடைக்கும்.
- நைஜிரியா நாட்டு பல்கலை கழகத்தில் கிழங்கு தோலையும் மதுபான ஆலை கழிவையும் சேர்த்து புரதம் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த தீவன கலவையை தயாரித்து ஆய்வு செய்தார்கள். உலர்ந்த மரவள்ளி கிழங்கு தோல் (25%) + உலர்ந்த மதுபான ஆலை கழிவு (75%) கொண்ட கலவையில் புரதச்சத்து 35%, கரையும் மாவுச்சத்து எரிச்சத்து 3,409 கிலோ கலோரி/ கிலோ உள்ளது.
மரவள்ளி கிழங்கு தோல் தீவன பயன்பாடு:
ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கு உலர்ந்த புல் (35%), உலர்ந்த கிழங்கு தோல் (35%)+ உலர்ந்த மரவள்ளி கிழங்கு (13%) + உலர்ந்த மதுபான ஆலை கழிவு (17%) கொண்ட தீவனத்தையும் மரவள்ளி கிழங்கு தோல் இல்லாத தீவனத்தையும் கறவை மாடுகளுக்கு அளித்து ஆய்வு செய்ததில் பால் உற்பத்தி மற்றும் பாலில் கொழுப்பு சத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை..அதே சமயம் SNF அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது எனவும் அறியப்பட்டது.
முடிவாக…
- மரவள்ளி இலைகள் கால்நடைகளுக்கு புரத சத்து மிக்க நல்ல தீவனம் ஆகும்
- மரவள்ளி பசும் இலைகளை அப்படியே தீவனமாக அளிக்கக் கூடாது. மரவள்ளி இலைகளை அறுவடைக்கு பின் விரயம் ஆக்காமல் அவற்றை இளம் குருத்துடன் நன்கு உலரவைத்தோ அல்லது சைலேஜ் செய்தோ கோடை காலத்தில் கால்நடைகளுக்கு அளிக்கவேண்டும்
- அதே போல மரவள்ளி கிழங்கு தோலையும் விரயம் ஆக்காமல் நன்கு உலர வைத்து கால்நடைகளுக்கு அளிக்கவேண்டும்
- உலரவைத்த மரவள்ளி இலைகள் அல்லது தோலுடன் கூடுதலாக உலர்ந்த முயல் மசாலாவை சேர்த்து அளிப்பது நன்மை தரும்
- மரவள்ளி இலைகளையோ அல்லது தோலையோ தீவனமாக அளிக்கும் பொழுது மறக்காமல் கந்தக தாது, பாஸ்பரஸ் தாது மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உயிச்சத்து கூடுதலாக அளிக்க வேண்டும்
Comments
Post a Comment