பால் பண்ணை தொழிலில் இலாபம் ஈட்ட பூஞ்சைகள் அற்ற தீவனம் அளியுங்கள்





பூஞ்சைகளால் தாக்கப்படாத தீவனங்களை கறவை மாடுகளுக்கு அளியுங்கள். அதன் மூலம் பூஞ்சைகள் அற்ற தூமையான, தரமான பாலை உங்கள் மாடுகள் உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பாலுக்கு மக்களிடையே தேவை அதிகரிக்கும் அதன் மூலம் உங்களின் இலாபமும் அதிகரிக்கும்.

தனியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற வேளாண் பயிர்கள் மழை இன்றி வாடும் பொழுது அவை உற்பத்தி செய்யும் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் மேற்பரப்பில் விரிசல் ஏற்படும்.  இந்த விரிசலின் மூலம் சுற்றுச் சூழலில் பரவி கிடைக்கும் பூஞ்சைகள் உட்புகுந்து பல்கிப்பெருகும். அந்த விளைப் பொருட்களில் இருந்து கிடைக்கும் வேளாண் கழிவுகள்/ உபபொருட்ககளான உடைந்த தானியங்கள், தவிடு, பிண்ணாக்கு போன்ற தீவனப்பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்பொழுது அவை கால்நடைகளில் பூஞ்சை நஞ்சை உற்பத்தி செய்து சிக்கல்களை உண்டாக்குகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) அறிக்கையின்படி உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தானியங்களில் சுமார் 25% பூஞ்சைகளால் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட தட்ப வெப்ப நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் ஆஸ்பிரிஜில்லஸ் (Asperigillus) என்ற பூஞ்சைஆப்லோடாக்ஸின் (Aflatoxin) நஞ்சை உற்பத்தி செய்யும். இந்த பூஞ்சை நமது நாட்டில் வெகுவாக பரவி உள்ளது. இந்த நஞ்சில் B1 ,B2, G1 G2 என்ற நான்கு வகைகள் உள்ளன. இதில் B1 நஞ்சு தான் வெகுவாக உள்ளது.


கால்நடைகளுக்கான கலப்பு தீவனத்தில் நாம் சேர்க்கும் மக்காச்சோளம் ஆப்லோடாக்ஸின் பூஞ்சை நஞ்சால் வெகுவாக பாதிக்கப்படுகின்றது .கால்நடைகளின் தீவனத்தில் B1,B2,G1,G2- என்ற நான்கு வகையான பூஞ்சை நஞ்சுகள் காணப்படுகின்றன. பொதுவாக பசும் தீவனங்களில் பூஞ்சை நஞ்சுகள் இருக்காது ஆனால் பசும் தீவனங்களை ஈரப்பதத்துடன் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் அதில் பூஞ்சை வளரும்.

இந்த பூஞ்சைகளை சூடேற்றி அழிக்கமுடியாது. எனவே வெப்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அடர் குச்சி தீவனங்களில் பூஞ்சைகள் வளராது என்ற நம்பிக்கை தவறானது.

தீவனம் மூலம் கால்நடைகள் உட்கொண்ட B1 பூஞ்சை நஞ்சு சுமார் 12 மணிநேரத்தில் M1 நஞ்சாக மாறி பாலிலும், சிறுநீரிலும் வெளியேற. ஆரம்பிக்கின்றது. B1 நஞ்சு M1 நஞ்சை விட அதிக நச்சு தன்மை கொண்டது .தீவனம் மூலம் உட்கொண்ட நஞ்சு 24 மணி நேரத்தில் பாலில் உச்ச அளவில் இருக்கும். மாடுகள் தீவனம் மூலம் உட்கொண்ட நஞ்சு சுமார் 4 நாட்களில் மாட்டின் உடலில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடும். இந்தியாவின் தர கட்டுப்பாட்டு அமைப்பு ( Bereau of Indian Standard ) 1000 கிலோ கால்நடை தீவனத்தில் அதிக அளவாக 20 மிகி வரை மட்டுமே பூஞ்சை நஞ்சு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

பூஞ்சையால் அதிகமான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள்:

கடலை பிண்ணாக்கு ,பருத்தி கொட்டை, மக்கா சோள குளுட்டன், மதுபான ஆலை ஈர கழிவுகள்.

பூஞ்சையால் மிதமான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள்:

மக்கா சோளம் ,பருத்திக் கொட்டை ,அரிசிப்பாலிஷ் ,கோதுமை தவிடு, எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு, நிலக்கடலை கொடி.

பூஞ்சையால் குறைவான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள் :


கொள்ளுக்கொடி ,சோயா பிண்ணாக்கு, உலர்ந்த வைக்கோல், ராகித் தாள்.

தீவனங்களை சேமிக்கும் சமயம் பூஞ்சைகள் வளர்வதை தடுக்கும் முறைகள் :

· சேமிக்கப்படும் தீவனங்களில் 13%க்கு குறைவாக ஈரப்பசை இருக்கும் வண்ணம் உலர்த்தி வேண்டும் இருக்க வேண்டும்.

· உடைந்த தானியங்கள் மற்றும் நொய்களை சேமிக்கக்கூடாது.

· வண்டுகளால் தாக்கப்பட்ட தீவனங்களை சேமிக்கக்கூடாது.

· உலர்ந்த தானியங்களை நன்கு சுத்தம் செய்து பின்புதான் மூட்டைகளில் அடைக்க வேண்டும்.தீவனம் அடைக்கப்பட்ட மூட்டைகளை சுவற்றின் பக்கம் சாய்த்து வைக்கக்கூடாது. அவற்றை சுவற்றில் இருந்து சற்று தள்ளி மர சட்டங்களின் மேல் வைக்க வேண்டும்.

தரமான தீவன பொருட்களையே வாங்குங்கள்:


நீங்கள் தீவனப் பொருட்களை வாங்கி அடர் தீவனம் வீட்டிலேயே தயாரித்தால் தயாரித்தால் தரமான தீவன பொருட்களையே வாங்குங்கள்.

· மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்ற தானியங்களை சிறிது எடுத்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து கீழே கொட்டினால் சில்லறை காசுகளை கொட்டுவது போன்ற சப்தத்துடன் இருக்கவேண்டும் மழை காரணமாக தானியங்களில் ஈரப்பதம் 10 -12 % மேல் இருந்தால் இந்த சப்தம் வராது.

· ஓரிரு தானிய மணிகளை எடுத்து வாயில் போட்டு மென்றால் அது மிக கடினமாக இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகம் இருந்தால் தானியங்கள் சற்று மிருதுவாக இருக்கும்.

· மக்கா சோள மணிகளை எடுத்து சிமெண்ட் தரை மேல் ஓங்கி அடித்தால் அவை ஓரிரு அங்குலங்கள் பந்து போல மேலே எழும்ப வேண்டும்.

· மக்காசோளம் மற்றும் சோளத்தை சிறிது கையில் எடுத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் அவற்றின் நிறம் சற்று கருமையாக மாறி இருந்தால் அவற்றை வாங்க வேண்டாம்.

· மழை ஈரம் காரணமாக தீவனத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்தால் அதில் வண்டுகள் உண்டாகி மக்கிய வாசனையுடன் இருக்கும்.

· சொந்தமாக தயாரிக்கப்படும் தீவனத்தில் நீங்கள் சேர்க்கும் பிண்ணாக்கில் குறிப்பாக செக்கில் ஆட்டப்பட்ட பிண்ணாக்கில் இருக்கும் எண்ணெய் மழை கால காற்றில் இருக்கும் ஈரப்பசையுடன் கலந்து கெட்டுவிடும் இதை பிண்ணாக்கை முகர்ந்து பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

· பிண்ணாக்கை வாங்கும்பொழுது உடைத்து பார்க்க வேண்டும். பிண்ணாக்கின் உள்ளே வெண்மை நிறத்தில் பூஞ்சை இருந்தால் அதை வாங்க வேண்டாம்.

பூஞ்சையால் பாதிக்கப்பட்ட தீவனங்களை உட்கொள்வதால் மாடுகளில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்:


தீவனத்தில் இருக்கும் பூஞ்சை காளான் மற்றும் அதன் நஞ்சுக்களின் அளவைப் பொறுத்து மாடுகளில் அவை ஏற்படுத்தும் விளைவுகளின் அறிகுறிகள் இருக்கும்.

· நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூஞ்சை நஞ்சு இருந்தால் மாடுகள் தீவனம் உண்ணும் அளவை வெகுவாக குறைத்துக்கொள்ளும்.

· வளர்ச்சி குன்றுதல், தீவனத்தை உற்பத்தியாக மாற்றும் திறன் குறைவது .

· சினை சுழற்சி கால அளவு குறைதல்,இனப்பெருக்க திறன் குறைவு கருகலைவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்களின் தாக்கம் அதிகரிப்பது போன்றவை ஏற்படும்.

· நீண்ட காலமாக உட்கொண்டால் உடல் எடை குறைவது உடல் முடிகள் பளபளப்பை இழப்பது வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.


கலப்பு தீவனம் வாங்கும் பொழுது அந்த தீவனம் இந்திய தர நிர்ணய ( BIS-Bureau of Indian Standards ) சான்றிதழ் பெற்றுள்ளதா என்பதை பார்த்து வாங்கவேண்டும். இந்திய தர நிர்ணய சான்றிதழ் பெற்ற தீவனங்களில் இந்த பூஞ்சைகள் இருக்காது.. நீங்கள் வாங்கும் தீவன மூட்டையின் மேல் அந்த நிறுவனத்தின் சின்னம் வரையப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

எழுத்தாளர் பற்றி






பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர், அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம். முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)