ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 1
கால்நடைகளுக்குத் தேவையான எரிச்சத்து, புரதம் மற்றும் தாதுச்சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்காதபோது, அவற்றின் உடலில் இயல்பாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்குகிறது.
குறிப்பாக, கறவை மாடுகள் மற்றும் சினை மாடுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, தேவையற்ற அழற்சியை உண்டாக்கி, நோய்க்கிருமிகள் எளிதில் தொற்ற வழிவகுக்கிறது. எனவே, பண்ணைப் பராமரிப்பில் மருத்துவச் செலவுகளைக் குறைத்து, பால் உற்பத்தியை நிலைநிறுத்த, கால்நடைகளின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற சரியான ‘ தீவனம் மேலாண்மை' பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 6383717150 இல் அழைக்கவும்.
குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி - பண்ணை இழப்பிற்கான முக்கிய காரணம்
கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் அவைகளுக்கு தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களும் (எரிச்சத்து, புரத சத்து, நார் சத்து, தாதுச்சத்து மற்றும் உயிர் சத்துக்கள்) சரியான அளவில் மற்றும் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும். இப்படி இல்லை என்றால் ஊட்ட சத்துக்கள் சரிவர பயன்படுத்தப்படாது.
அதனால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி, இனபெருக்கம், கன்றுகள் மற்றும் கிடாரிகளில் வளர்ச்சி குறைபாடு ஏற்படும். இத்துடன் மிக முக்கியமாக கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மாடுகள் அடிக்கடி நோய்வாய்ப்படும்.
இந்த ஊட்ட சத்துக்கள் மாடுகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்ல செல்களை உருவாக்கவும், அவற்றை பராமரித்து அவற்றின் செயலாற்றலை அதிகரித்து, நோய் கிருமிகளை அழிக்கும் வல்லமையை அளிக்கவும் பயன்படுகின்றன. மாடுகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுதுதான் நோய் கிருமிகள் மிக எளிதில் மாடுகளின் உடலில் நுழைந்து நோயை உருவாக்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைய முக்கியமான காரணம் மாடுகளுக்கு ஏற்படும் அழற்சி தான்.
எனவே மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற சரியான அளவில் ஊட்ட சத்துக்கள் மிகுந்த தீவனம் அளித்து மாடுகளுக்கு ஏற்படும் அழற்சியை பெருமளவு குறைத்து பராமரிப்பு செய்யவேண்டும்.
சரியான அளவில் ஊட்ட சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கவேண்டும்:
மாடுகளுக்கு கலப்பு தீவனம், பசும் தீவனம் மற்றும் நெல் வைக்கோல் போன்ற உலர்ந்த வேளாண் கழிவுகள் தீவனமாக அளிக்கப்பட வேண்டும்.
கலப்பு தீவனம்:
உடல் எடை, பால் கொடுக்கும் அளவு, சினைக்காலம் போன்றவற்றை பொறுத்து மாடுகளுக்கு அளிக்கவேண்டிய கலப்பு தீவன அளவு மற்றும் அதில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் அளவு மாறுபடும்.
கன்று ஈன்ற முதல் 2 ½ - 3 மாதங்கள்:
அதிக எரிச்சத்து மற்றும் அதிக புரதச் சத்து கொண்ட கலப்பு தீவனம் அளிக்க வேண்டும். தினசரி 15-20 லிட்டர் பால் கொடுக்கும் மாடுகளுக்கு கலப்பு தீவனத்தில் 16-18% அளவு புரத சத்தும், 20 லிட்டர் மேல் பால் கொடுத்தால் 19% புரத சத்தும் இருக்கும் வண்ணம் கலப்பு தீவனம் தயாரிக்கப்பட வேண்டும்.
கன்று ஈன்ற 3 முதல் 10 மாதங்கள்:
அதிக எரிச்சத்து மற்றும் ஓரளவு புரதச் சத்து கொண்ட தீவனம் அளிக்க வேண்டும். கலப்பு தீவனத்தில் 15-17% அளவு புரத சத்து இருக்கவேண்டும்.
கன்று ஈன்ற 10 முதல் 12 மாதங்கள்:
குறைந்த எரிச்சத்து மற்றும் குறைந்த புரதச் சத்து கொண்ட தீவனம் அளிக்க வேண்டும். கலப்பு தீவனத்தில் 10-12% அளவு புரத சத்து இருக்கவேண்டும்.
பசும் தீவனம் :
- பசும் புற்கள் , பயறுவகை பசும் தீவனம் , மர இலைகள் கொண்ட கலவையை மாடுகளின் உடல் எடையில் 10-12% அளவு வரை அளிக்க வேண்டும்
- வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளை மாடுகள் எவ்வளவு உட்கொள்ளுமோ அந்த அளவு அளித்தால் போதுமானது
நிறைமாத சினை மாடுகள் கன்று ஈன 3 வாரங்கள் முன்பிருந்தும் முன் கறவை காலத்திலும் தீவனம் உட்கொள்ளும் அளவை ஏறத்தாழ சுமார் 32% வரை குறைத்துக்கொள்கின்றன . இதனால் மாடுகளுக்கு தீவனம் மூலம் கிடைக்க வேண்டிய எரிச்சத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு உடலில் இருக்கும் கொழுப்பை எரிச்சத்துக்காக மாடுகள் பயன்படுத்த நேரிடும் . அதனால் மாடுகளின் இரத்தத்திலும் கல்லீரலிலும் கொழுப்பு தொடர்புகொண்ட சில இரசாயனங்கள் சேர ஆரம்பிப்பதால் ஏற்படும் அழற்சி ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கும்.. இதனால் மாடுகளில் நோய் கிருமிகள் மூலமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் நோய் தாக்க வாய்ப்பு அதிகரிக்கும் .
அதனால் மாடுகளின் நிறை சினை மற்றும் முன்கறவை காலங்களில் ஊட்ட சத்துக்கள் நிறைந்த தீவனம் அளித்து மாடுகளில் தீவனம் கொள்ளும் அளவு குறையாமல் பராமரித்து மாடுகள் நோய்வாய்ப் படாமல் காக்கவேண்டும்
ஆரோக்கியமான தீவனம் - லாபகரமான பண்ணை!
கால்நடை வளர்ப்பில் முறையான தீவன மேலாண்மை என்பது வெறும் உணவு பழக்கம் மட்டுமல்ல, அது ஒரு முதலீடு. நாம் பார்த்தது போல, கன்று ஈன்ற காலம் முதல் பால் கறக்கும் காலம் வரை ஒவ்வொரு நிலையிலும் மாடுகளின் உடலியல் தேவைகள் மாறுபடுகின்றன. குறிப்பாக, சினை மாடுகளின் கடைசி வாரங்களில் தீவன உட்கொள்ளல் குறையாமல் பார்த்துக்கொள்வது, வருங்காலப் பால் உற்பத்திக்கும் அந்த மாட்டின் நீண்ட கால ஆரோக்கியத்திற்கும் அடித்தளமாகும்.
முறையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய தீவனம் அளிப்பதன் மூலம்:
- கால்நடைகளின் மருத்துவச் செலவு குறைகிறது.
- பால் உற்பத்தி மற்றும் தரம் உயர்கிறது.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

Comments
Post a Comment