மாம்பழக் கழிவுகளில் சைலேஜ் செய்வது எப்படி?



மாம்பழ சைலேஜ்:

மாம்பழத்தை கொட்டை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன்
100 கிலோவுக்கு 1.0 கிலோ சமையல் உப்பை சேர்த்து கலந்து வழக்கம் போல சைலேஜ் செய்யலாம் அல்லது மாம்பழத்துடன் சமையல் உப்பு, சிறிது மொலாசஸ் மற்றும் யூரியா கலந்து அதை மக்காச்சோள தட்டையுடன் கலந்து 
4-5 வாரங்கள் காற்று புகாமல் சேமித்து வைத்து சைலேஜ் செய்யலாம்.  அஸ்பெரிஜில்லஸ் நைகர் ( Asperigillus niger ) என்ற நுண்ணுயிரை மாம்பழத் தோலுடன் கலந்தால் தரமான சைலேஜ் கிடைக்கும்.

மாம்பழத்தோல்:


கோடை காலம் மாம்பழ சீசன் பருவம். மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகள் மாம்பழத்தை வாங்கி பதப்படுத்துகின்றன. மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் மாம்பழத்திலிருந்து சதை பகுதியை பிரித்தெடுத்த பின், அதன் தோல் மற்றும் கொட்டைகள் கழிவாக கிடைக்கின்றன.

சாலை ஓரங்களில் கொட்டப்படும் இந்த கழிவுகளில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். நாள்பட்ட இந்த கழிவுகளில் சில அமிலங்கள் உற்பத்தியாகி சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். இதை அந்தப்பகுதியில் மேயும் மாடுகள் உட்கொண்டால் மாடுகளில் அமிலத்தன்மை ஏற்படும்.

மாம்பழத்தோலில் சுமார் 10-14 % வரை சதை பகுதி ஒட்டிக்கொண்டிருப்பதால் அதில் சர்க்கரை சத்து அதிகம் இருக்கும். எரிச்சத்து மிகுந்த இந்த சர்க்கரை சத்து மற்றும் தோலில் இருக்கும் நார்ச்சத்துக்களை உபயோகப்படுத்தும் வகையில் கால்நடை தீவனமாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை நன்கு உலரவைத்து அரைத்து வைத்துக் கொண்டால் கலப்பு தீவனத்தில் சேர்தளிக்கலாம்.

மாம்பழத்தோலில் உலர்நிலையில் புரதம் 4.6%, நார்12.6% ,NDF நார் 35.5% , ADF நார் 17.3% , கொழுப்பு 3.8% , சுண்ணாம்புச்சத்து 8.1% மற்றும் பாஸ்பரஸ் சத்து 2.8% உள்ளது. இதன் தோல் மாடுகளில் சுமார் 74% வரை செரிமானம் ஆகிறது.

மாம்பழத்தோலில் சுண்ணாம்பு சத்து மிக அதிகமாகவும், பாஸ்பரஸ் சத்து குறைவாகவும் உள்ளதால் மாடுகளில் சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மாம்பழத் தோலை தீவனமாக அளித்தால், மறக்காமல் கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடை தீவனத்தில் சேர்த்து அளிக்க வேண்டும்.

மாம்பழத்தோலில் ஈரப்பதம் 70-75% இருப்பதால் மாடுகள் இதை உட்கொள்ளாது. அதனால் ஈரப்பதம் மிக குறைவாக உள்ள பிற தீவனங்களை இத்துடன் சேர்க்க வேண்டும். இதை தவிர புரதச்சத்து மிக குறைவாகவும் இருப்பதால் புரதச்சத்தை அதிகரிக்க யூரியாவை சேர்த்து சைலேஜ் செய்ய வேண்டும்.

மாம்பழத்தோலுடன் ஈரப்பதம் குறைந்த தீவனங்களை உதாரணமாக குச்சிக்கிழங்குதிப்பி, தவிடு போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.




சுமார் 60 கிலோ மாம்பழத்தோலுடன் 40 கிலோ குச்சிக்கிழங்கு திப்பியை நன்கு கலந்தால், இந்த கலவையின் ஈரப்பதம் மாடுகள் உட்கொள்ள ஏற்ற அளவுக்கு குறைந்துவிடும். இந்த கலவையில் செரிக்கக் கூடிய புரதம் 2.0%மும், மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 57%மும் இருக்கும். சர்க்கரை சத்து அதிகம் உள்ள மாம்பழத் தோலை மட்டும் உட்கொள்வதால் ஏற்படும் அமிலத் தன்மையை குச்சிக்கிழங்கு திப்பியை சேர்ப்பதால் தவிர்த்து விடலாம்.

மாம்பழத் தோல் சைலேஜ்:

மாம்பழத் தோலை முதலில் பிளாஸ்டிக் விரிப்பின் மேல் நன்கு பரப்பி ஒரு நாள் முழுவதும் உலர வைத்து, அதில் இருக்கும் 78% ஈரப்பதத்தை 30%மாக குறைக்க வேண்டும். இத்துடன் சமையல் உப்பை மட்டும் சேர்த்து வழக்கம் போல காற்று
புகாமல் 42 நாட்கள் மூடி வைத்து தரமான சைலேஜ் செய்ய முடியும். இத்துடன் யூரியாவை சேர்த்தோ அல்லது சேர்க்காமாலோ சைலேஜ் செய்யலாம். யூரியா சேர்க்கப்பட்டால் மாடுகளுக்கு கிடைக்கும் புரதச்சத்தின் அளவு அதிகரிக்கும்.


கம்பு –நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோல் சைலேஜ்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தில் மாம்பழத் தோலை சைலேஜ் செய்யும் முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்பு- நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோலை 10% சேர்த்து சுவைக்காக சமையல் உப்பு 1% கலந்து 5 -6 வாரங்கள் காற்று புகாமல் மூடிவைத்து சைலேஜ் செய்யலாம். இதில் சர்க்கரைச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டியதில்லை.

இந்த சைலேஜில் செரிக்கக்கூடிய புரதம் 3.9% வரையும் மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 52.7% வரையும் இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இதை நார்ச்சத்து கொண்ட தீவனமாக வழக்கமாக அளிக்கப்படும் தீவனத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபொழுது, ஆடுகள் உட்கொண்ட மொத்த தீவன அளவிலோ, ஆடுகளின் வளர்ச்சியிலோ எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை. இந்த தீவனம் ஆடுகளில் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம் ஆடுகளுக்கு அளிக்கப்பட பசும்புல் 10% வரை சேமிக்கப்பட்டது.

ஒரு ஆய்வில் மாம்பழத்தோல் ஒரு நாள் வரை வெயிலில் உலர வைக்கப்பட்டு யூரியாவுடன் சேர்த்து சைலேஜ் செய்யப்பட்டது. இந்த சைலேஜை வளர்ந்த கிடாரிகளுக்கு தீவனமாக அளித்த பொழுது தீவனம் உட்கொண்ட அளவும் கிடேரிகளில் வளர்ச்சியும் அதிகரித்தன.


கிடேரிகளின் மொத்த தீவனத்தில் 30% மாம்பழத்தோல் சைலேஜ் சேர்த்த பொழுது மொத்த தீவன தரம் மற்றும் தீவனத்தில் இருந்த மொத்த நார்ச்சத்தின் தரம் சுமார் 5.5% அதிகரித்தது.

ஒரு ஆய்வில் வைக்கோல் அளிக்கப்பட்ட ஆடுகளின் தீவனத்தில் மாம்பழத் தோலை மட்டுமே அளிப்பதை விட அத்துடன் 10% மாம்பழ கொட்டை பருப்புடன் யூரியாவை சேர்த்தளித்த பொழுது செம்மறி ஆடுகள் தினசரி 50 கிராம் வளர்ச்சி அடைந்தன என்று அறியப்பட்டது. யூரியாவுக்கு பதில் யூரியா மொலாஸஸ் தீவன கட்டியை அளிக்கலாம்.

சைலேஜ் செய்ய வெல்லப்பாகுக்கு மாற்றாக மாம்பழத்தோலை பயன்படுத்த முடியும். ஒரு ஆய்வில் வாழைப்பழத் தோலை சைலேஜ் செய்ய மொலாசஸ் அல்லது அதற்கு மாற்றாக மாம்பழத்தோல் பயன்படுத்தப்பட்டது. இந்த சைலேஜுகள் மேயும் செம்மறி ஆடுகளுக்கு அளித்து ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு முடிவில் வாழைப்பழத் தோலுடன் மாம்பழத்தோல் சேர்த்து செய்யப்பட்ட சைலேஜ் உட்கொண்ட ஆடுகளின் உடல் வளர்ச்சி வாழைப்பழத் தோலுடன் மொலாசஸ் சேர்த்து செய்யப்பட்ட சைலேஜ் உட்கொண்ட ஆடுகளின் உடல் வளர்ச்சிக்கு இணையாக இருந்தது.

பின்னொரு ஆய்வில் மாம்பழத்தோல் கழிவுடன் கூடுதல் எரிச்சத்திற்காக தீவனத்தில் தானியங்கள் 10 % சேர்த்து அளிக்கப்பட்டது. இதை வைக்கோல் மற்றும் யூரியா கலந்த தீவனமாக உட்கொண்ட செம்மறி ஆடுகளில் வளர்ச்சி கூடுதலாக இருந்ததாக பதிவு செய்யப்பட்டது.

மாம்பழத்தோல் சைலேஜ் மற்றும் வைக்கோலுடன் புரதச்சத்துக்காக மர இலைகளை அளியுங்கள்:

மாம்பழத்தோல் சைலேஜ் மற்றும் வைக்கோலுடன் சூபாபுல் இலைகளை சேர்ப்பதால் தீவன செரிமானத்தில் ஏற்படும் மாற்றங்கள் ( % ) கீழ்க்கண்ட அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ளன.



மாம்பழத்தோல் சைலேஜ் மற்றும் வைக்கோலுடன் மர இலைகளை உதாரணமாக, சூபாபுல் இலைகளை 15% வரை சேர்ப்பதால் மொத்த தீவன செரிமானம் மற்றும் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.

எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-may15-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க





Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)