அதிகம் பால் தரும் மாடுகளை வைத்திருக்கும் பண்ணையாளர்கள் கவனிக்க வேண்டியவை
கறவை மாடுகளில் தினமும் 15 லிட்டருக்கு மேல் பால் தருபவைகளும் எருமைகளில் தினசரி 12 லிட்டருக்கு மேல் பால் தருபவைகளும் “அதிகம் பால் தருபவை” என்ற வரையறைக்குள் வரும்.
உடல் கட்டு (Body Condition Score) குறைந்து மாடுகள் உடல் மெலிதல்:
- அதிகம் பால் தரும் கறவை மாடுகளுக்கு கன்று ஈன்ற முதல் நூறு நாட்களில் (முன் கறவை காலம்) பால் உற்பத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தீவனம் மூலம் ஈடுகட்ட இயலாது.
- இந்த ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஈடுகட்ட உடலில் இருக்கும் தசைகள் பயன் படுத்தப்படுவதால் மாடுகளின் உடல் மெலிந்து உடல் கட்டு ( BCS )குறைய ஆரம்பிக்கும்.
- மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க உடல் கட்டு குறையும் . உடல் கட்டு குறைய குறைய தசைகள் மூலம் பால் உற்பத்திக்கு கிடைக்கும் ஊட்ட சத்துக்கள் குறைந்து அதனால் படிப்படியாக பால் உற்பத்தியும் குறையும் .
அழற்சி பிரச்சனைகள்:
- “அதிகம் பால் தரும் கறவை மாடுகளின்” உச்சகட்ட பால்சுரப்பின் பொழுது, தீவனம் உட்கொள்வதில் உச்சகட்ட பசி இன்மை ,எரிச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் அவை எப்பொழுதும் ஒருவித அழற்சியில் இருக்கும்.
- இதன் காரணமாக அவை பல்வேறு உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளால் அவ்வப்பொழுது பாதிக்கப்பட்டு பால் உற்பத்தியை குறைத்துக்கொள்கின்றன.
- மிக முக்கியமாக பால் சுரம், கீடோசிஸ், மடியில் நீர் கோர்த்து வீக்கம் மற்றும் இனபெருக்கம் சம்பந்தமான பல பிரச்சனைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன.
ஊட்ட சத்து குறைபாடு மற்றும் செரிமான பிரச்சனைகள்:
- அதிகம் பால் தரும் கறவை மாடுகளின் முன் கறவைக்காலங்களில் (கன்று ஈன்ற முதல் 100 நாட்கள் ) மாடுகளில் பசி குறைவாக இருக்கும். தீவனம் குறைவாக உட்கொள்ளும்.
- அதனால் அதிக எரிச்சத்து மற்றும் அதிக புரத சத்து கொண்ட தீவனத்தை இந்த மாடுகளுக்கு அளிக்கவேண்டும்
கருத்தரிக்கும் திறன் ( Fertility ) குறையும்:
- மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அழற்சியின் காரணமாக அவை கருத்தரிக்கும் திறன் 10% வரை குறையும்.
- மாடுகள் ஒவ்வொரு முறை கன்று ஈன்று பால் சுரப்பு உச்சம் தொடும் வரை அவை அழற்சியில் இருக்கும். இந்த அழற்சி “ அதிகம் பால் தரும் மாடுகளில்” பால் உற்பத்திக்கு ஏற்ப அதிகரிக்கும்.
- அதிகம் பால் கொடுக்கும் மாடுகளில் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறையும் இனப்பெருக்க மேலாண்மை செய்து இந்த அழற்சியின் வீரியத்தை குறைக்க வேண்டும்..
- அதிகம் பால் கொடுக்கும் மாடுகளில் வருடம் ஒன்றுக்கு ஒரு கன்று பிறக்கும் வகையில் மேலாண்மை செய்தால் பெரும்பாலான மாடுகள் உச்சகட்ட பால் சுரப்பு அளவை வேகமாக அடைந்து அதே வேகத்தில் இயல்பாகவே பால் சுரப்பும் மிக வேகமாக குறைந்துவிடும் . இதனால் மாடுகள் பால் கொடுக்கும் நாட்கள் குறைந்துவிடும்.
- ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை இனப்பெருக்க மேலாண்மை செய்தால் இயல்பான பால் சுரப்பு குறைவது படிப்படியாகவும் பால்சுரப்பு நீண்ட நாட்களும் இருக்கும். இதனால் மாடுகள் பால் கொடுக்கும் நாட்கள் அதிகரித்து அந்த ஈற்றில் மொத்த பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
கன்று ஈன்ற பின்முதல் சினை சுழற்சி தாமதம்:
- அதிகம் பால் தரும் பல மாடுகளில் குறிப்பாக பிரீசியன் இன மாடுகளில் பால் உற்பத்தி அதிகம் இருந்தால் கன்று ஈன்றபின் ஏற்படவேண்டிய முதல் சினை சுழற்சி தவறிவிடும் .சுழற்சி அறிகுறிகள் தெளிவாக வெளிப்படாமல் இருக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு:
- அதிகம் பால் தரும் மாடுகளில் அதிகப்படியான அழற்சி காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மாடுகள் நோயால் பாதிக்கப்படுவது அதிகரிக்கும்
ஆரோக்கியம் தொடர்பான பிற இடர்பாடுகள்:
- ஓரளவு பால்தரும் மாடுகளை விட அதிகம் பால்தரும் மாடுகள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளால் அடிக்கடி பாதிப்படையும்.
- மாடுகள் சரியான ஊட்ட சத்து பராமரிப்பு இன்மையால் உடல் மெலிவது , மடி நோய், சுண்ணாம்பு சத்து குறைபாட்டால் அடிக்கடி பால் சுரம், மாடுகளின் வயிற்றில் அமில தன்மை நெடுநாட்களாக அதிகரிப்பின் காரணமாக ( Chronic Acidosis ) குளம்புகள் பாதிக்கப்பட்டு அவை நொண்டி நொண்டி நடப்பது, கீடோசிஸ் எனப்படும் சர்க்கரை சத்து குறைபாடு, கன்று ஈன்றபின் கன்றை சுற்றி இருந்த உறுப்பு விழாமை, கர்பப் பையில் நோய் தாக்கம் போன்ற போன்ற பிரச்சனைகளால் அடிக்கடி பாதிப்படையும் .
- அதிகம் பால் தரும் மாடுகளின் முன்கறவை காலங்களில் உடல் கட்டு 2.0க்கு கீழே குறைந்தாலோ , சுண்ணாம்பு சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மடி நோய் ஏற்பட்டாலோ அம்மாடுகளில் சினை சுழற்சி ஏற்படுவது தாமதிக்கப்பட்டு அவை மீண்டும் சினை பட சற்று காலதாமதம் ஆகும் .
- நல்ல நில வளம் மற்றும் நீர்வளம் வைத்திருக்கும் பெரு விவசாய நண்பர்கள் அதிகம் பால் தரும் மாடுகளை வைத்து பால் பண்ணை அமைக்க முடியும். அதிக புரதம் மற்றும் அதிக எரிச்சத்து கொண்ட அடர் தீவனம் மற்றும் பசும்புல், வேலிமசால் ,காராமணி, சணப்பு போன்ற பயறு வகை பசும் தீவனங்களை தேவையான அளவு அளிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
- இதன் காரணமாக 20 லிட்டர் பால் தரும் ஒரு மாட்டை பராமரிப்பதற்கு 10 லிட்டர் பால் தரும் இரண்டு மாடுகளை பராமரிக்கலாம். இதனால் அழற்சி, தீவன செலவு மற்றும் மருத்துவ செலவை குறைத்து வருவாய் இழப்பை குறைக்க இயலும்...
- இதுமட்டுமின்றி இரண்டு மாடுகளை பராமரித்தால், ஒரு மாட்டில் பால் சுரப்பு குறைந்து பால் வற்றும் சமயம் நெருங்க நெருங்க மற்றொரு மாடு கறவையில் இருக்கும். இதனால் உங்கள் பண்ணையில் பால் உற்பத்தி எந்தவித தொய்வும் இல்லாமல் சீராக இருக்கும். உங்களுக்கும் வருடம் முழுவதும் வருமானம் சீராக இருக்கும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
கறவை மாடுகளுக்கு பசும் தீவனத்துடன் மர இலைகளை சேர்த்து அளித்து பால் உற்பத்தியை பெருக்குங்கள்
Thank you sir🙏
ReplyDelete