அஜீரண கோளாறு ஏற்பட்டால் மாடுகளில் பால் உற்பத்தி குறையுமா !!!
மாடுகளுக்கு ஏற்படும் அஜீரணம்
மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை தவறுகளால் மாடுகளின் முதல் வயிற்றில் தீவன செரிமானத்திற்கு உகந்த சூழ்நிலை பாதிக்கப்படுவதால் அஜீரணம் ஏற்படுகின்றது . அஜீரணம் ஏற்பட்டால் மாடுகளுக்கு கிடைக்கவேண்டிய ஊட்ட சத்துக்கள் “ B “ உயிர் சத்துக்கள் மற்றும் உயிர் சத்து “ K “உற்பத்தி பாதிக்கப்பட்டு மாடுகளில் உற்பத்தி குறைந்துவிடும்.
செரிமானத்திற்கு உகந்த சூழ்நிலையை பாதிக்கும் காரணிகள்
- வழக்கமாக அளிக்கும் தீவனத்தை திடீரென்று மாற்றுவது
- தேவைக்கு அதிகமாக தீவனத்தை வலுக்கட்டாயமாக மாடுகளுக்கு ஊட்டுவது
- மாவுச்சத்து மற்றும் புரத சத்து குறைபாடான தீவனங்களை தேவைக்கு அதிகமாக அளிப்பது
- மாடுகளின் முதல் வயிற்றில் மிக விரைவில் செரிக்க கூடிய தீவனங்களான தானியங்கள் ,மாவு வகைகள், வேகவைத்த தானியங்கள், கூழ் போன்றவற்றை அதிக அளவில் அளிப்பது
- நார் சத்து குறைந்த தீவனம் அளிப்பது மொத்த தீவனத்தையும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட நுணுக்க அரைத்து தீவனம் இடுவது
- பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பயறு வகை பசும் தீவனம் ( Legume fodder ) அளிப்பது
- பூஞ்சை போன்றவற்றால் கெட்டுப்போன தீவனத்தை அளிப்பது
- மாடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீரின் அளவை மிகவும் குறைப்பது
மாடுகளுக்கு அஜீரணம் ஏற்பட்டால் தோன்றும் அறிகுறிகள்
- மாடுகளின் வயிற்றில் ஏற்படும் அஜீரணத்தை அளவு மற்றும் காரணங்களை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்
- தீவனம் உட்கொள்வது குறைந்துவிடும்
- முதல் வயிறு (ரூமென் )சுருங்கி விரியும் தன்மை குறைந்தோ அல்லது முற்றிலும் இல்லாமல் போகும்
- முதல் வயிறான ரூமேனில் அமில தன்மை ஏற்படும்
- மாடுகள் கழிக்கும் சாணம் இளக்கியதாகவும் துர்நாற்றமுடன்
இருக்கும்
- மாடுகளின்
முதல் வயிறு கெட்டியாக இருக்கும் மாடுகள் அசைபோடுவது நின்றுபோகும்.
- பால் உற்பத்தி குறைந்துவிடும்.
- தங்களுக்கு தேவையான தீவன வகைகளை தேர்ந்தெடுத்து தேவையான அளவுக்கு உட்கொள்ளும் ஆற்றல் கால்நடைகளுக்கு உள்ளது .
- தீவனத்தை ஊட்டிவிடுவதால் அவை தேவைக்கு அதிகமாக தீவனம் உட்கொண்டு அஜீரணம் ஏற்படும். மாடுகளுக்கான வழக்கமான தீவனத்தை திடீரென்று மாற்றாமல் மாற்றப்பட்ட தீவனத்தை 7-10 நாட்களில் சிறிது சிறிதாக அளித்து பழக்க வேண்டும் .
- தானியங்கள் ,காஞ்சி, கூழ், வேகவைத்த தானியங்கள், மாவு வகைகள் போன்றவை தேவைக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் முதல் வயிற்றில் மிக விரைவில் நொதிக்கப்பட்டு லாக்டிக் ( Lactic acid ) அமிலம் உட்பட அமிலங்கள் விரைவில் உற்பத்தி செய்யப்படும். இதனால் மாடுகளின் முதல் வயிற்றில் அமில தன்மை ஏற்பட்டு தீவன செரிமானத்திற்கு உகந்த சூழ்நிலை பாதிக்கப்பட்டு அஜீரணம் ஏற்படுகின்றது
- மாடுகளுக்கு அளிக்கப்படும் தானியங்களின் மொத்த அளவு மாடுகளின் உடல் எடையில் மேல்படாமல் அதே சமயம் மொத்த தானியத்தையும் பல பகுதிகளாக பிரித்து அளிக்க வேண்டும்
- மாடுகளுக்கு அளிக்கப்படும் நார் சத்து மிகுந்த புல் வகைகளை மிக குறைவாக அளித்தால் அசைபோடும் எண்ணிக்கை குறைந்து உமிழ் நீர் சுரப்பும் குறைந்துவிடும் .மாடுகளின் உமிழ் நீரில் அமில தன்மையை சரிசெய்யும் பை கார்போனேட் ( Bicarbonates )இரசாயனம் உள்ளது . உமிழ் நீர் சுரப்பு குறைவதால் அமில தன்மையை சீராக்கும் வேலை குறைந்துவிடும் .அதனால் மாடுகளுக்கு அவற்றின் மொத்த தீவனத்தில் நார் சத்து மிகுந்த புல் போன்ற தீவனங்களை60% (நாள் ஒன்றுக்கு 25-30கிலோ )வரை அளிக்க வேண்டும்
- மாடுகளுக்கு அமில தன்மை ஏற்பட்டிருந்தால் சமையல் சோடா மாவை இரண்டு பகுதிகளாக பிரித்து காலை மற்றும் மாலை தீவனத்தில் கலந்து அளிக்க வேண்டும்
- மாடுகளுக்கு பயறு வகை பசும் தீவனங்களை அவற்றிற்கு அளிக்கப்படும் நார் தீவனத்தில் 30% வரை தான் அளிக்க வேண்டும் அதிகமாக அளித்தால் மாடுகளின் முதல் வயிற்றில் கார தன்மை ( Alkalainity )ஏற்பட்டு முதல் வயிற்றின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்பட்டு அஜீரணம் ஏற்படும்
- சரியான முறையில் தயாரிக்கப்படாத சைலேஜ் , சரியான முறையில் சேமித்து வைக்கப்படாத மதுபான ஆலை கழிவு தீவனம் ,பூஞ்சையால் பாதிக்கப்பட்ட தீவனங்கள் போன்றவற்றை மாடுகள் உட்கொண்டாலும் அஜீரணம் ஏற்படும் .
- மாடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும்
குறிப்பாக கோடை காலங்களில் அஜீரணம் ஏற்படும் .
எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-21-1-25-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: யூரபாரம் வாட்ஸாப்ப் சேனல் லிங்க்
Comments
Post a Comment