கால்நடைகளின் உற்பத்தி குறையாமல் இருக்க சுத்தமான தண்ணீரை அளியுங்கள்
தண்ணீரின் தரம் சோதிக்கப்படாமல் கால்நடைகளுக்கு அளிக்கப்படுவதால் கால்நடைகளில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர் அதை பற்றி அறியாமலே நஷ்டம் அடைகின்றனர். மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் மட்டுமின்றி அவைகளுக்கு அளிக்கப்படும் தண்ணீரும் தான் மாடுகளில் உற்பத்தி அளவை நிர்ணயம் செய்கின்றன. தண்ணீர் தொட்டியில் அளிக்கப்படும் தண்ணீர் மற்றும் தீவனங்களில் இயல்பாகவே இருக்கும் ஈரப்பதம் மூலம் கால்நடைகள் தண்ணீரை பெறுகின்றன. இதை தவிர, தாங்கள் உட்கொண்ட தீவனத்தில் இருக்கும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தை உடலில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படுத்தும் சமயம் உற்பத்தியாகும் தண்ணீர் மூலமும் ( Metabolic water ) தங்கள் தண்ணீர் தேவையை ஈடு செய்கின்றன. 100 கிராம் மாவுச்சத்தை வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படுத்தும் பொழுது 60 கிராமும், புரதச்சத்தை பயன்படும் பொழுது 40கிராமும், கொழுப்புச் சத்தை பயன்படும்பொழுது 109 கிராமும் உடலில் தண்ணீர் உற்பத்தியாகின்றது. கால்நடைகள் தண்ணீர் குடிப்பது அவை உட்கொண்ட தீவனத்தின் அளவையும் அவை அளிக்கும் பாலின் அளவையும் பொறுத்தத...