தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் துவரை சாகுபடி கழிவுகள்
- துவரை சாகுபடியில் பசும் துவரை செடிகள் முற்றிய காய்களுடன் அறுவடைக்குப்பின் உலர வைக்கப்பட்டு பின்பு தரையில் அடித்து உலர்ந்த காய்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன.
- இதில் உலர்ந்த இலைகள் ,சிறு சிறு குச்சி கூளங்கள் கழிவாக கிடைக்கின்றன. துவரை இலைகள் புரத சத்து நிறைந்த தீவனம் ஆகும்
- துவரை இலைகளில் புரத சத்து 11-17%வரை உள்ளது. NDF நார் 46.6%, ADF நார்33.3%,கொழுப்பு சத்து2.70%,கரையும் மாவு சத்து 48.5% வரை உள்ளது உள்ளது .
- செம்மறி ஆடுகளுக்கும் உலர்ந்த துவரை இலைகள் நல்ல தீவனம் ஆகும் . செம்மறி ஆடுகளுடன் ஒப்பிட்டால் வெள்ளாடுகளுக்கு இந்த இலைகளின் செரிமான அளவு , செரிக்க கூடிய ஊட்ட சத்துக்களின் அளவு வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து போன்றவை அதிகம் கிடைக்கும்
- துவரை இலைகள் மிகுந்த செரிமானம் கொண்டது.
- பொதுவாக துவரை இலைகளை பிற வேளாண் கழிவுகளுடன் சேர்த்து தீவனம் அளித்தால் மொத்த தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும் .
- துவரை இலை தீவனத்தில் அதில் உள்ள இலைகள் மற்றும் சிறு சிறு கிளைகள் மற்றும் உடைந்த பருப்புகளின் அளவைப் பொறுத்து அதில் உள்ள ஊட்ட சத்துக்கள் மற்றும் அவற்றின் செரிமானம் இருக்கும். அதில் புரத சத்து 10.0 -26% வரை இருக்கும் .
- இந்த இலைகளில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களின் விகிதம் சரியான அளவில் இல்லாததால் இத்தீவனத்துடன் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்ட தானியங்கள், தவிடு போன்றவற்றை சேர்த்து அளிக்கவேண்டும்
- ஒரு ஆய்வில் கலப்பு தீவனத்துடன் வைக்கோல் அல்லது உலர்ந்த துவரை செடி கழிவு வளரும் கிடேரிகளுக்கு அளிக்கப்பட்டது . கலப்பு தீவனத்துடன் வைக்கோல் உட்கொண்ட மாடுகளை விட வைக்கோலுக்கு பதில் உலர்ந்த துவரை இலைகளை உட்கொண்ட மாடுகளுக்கு ஒரு கிலோ வளர்ச்சியை பெற குறைந்த அளவு தீவனம் போதுமானதாக இருந்தது .உலர்ந்த துவரை இலைகளை தீவனமாக அளிப்பதால் கலப்பு தீவனம் மற்றும் வைக்கோலை சேமிக்கமுடியும்
- பசும் புல்லுடன் தினசரி 300 கிராம் கலப்பு தீவனம் அளிக்கப்பட்ட வெள்ளாடுகளுக்கு கலப்பு தீவனத்திற்கு பதில் உலர்ந்த துவரை இலை கழிவுகள்300 கிராம் அளிக்கப்பட்டது பிற வெள்ளாட்டுக்களுக்கு உலர்ந்த துவரை இலைகளுக்கு பதில் 75,150,225 மற்றும்300 கிராம் உலர்ந்த வேப்பன் இலைகள் அளிக்கப்பட்டது .ஆய்வு முடிவில் வெள்ளாடுகளுக்கு கலப்பு தீவனத்திற்கு பதில் சரிபாதி அளவு உலர்ந்த துவரை இலைகள் மற்றும் உலர்ந்த வேப்பன் இலைகள் கொண்ட கலவையை அளிப்பதால் வெள்ளாடுகள் தீவனம் உட்கொண்ட அளவிலோ தீவன செரிமான அளவிலோ தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறனிலோ அல்லது ஆடுகளில் கிடைக்கும் இறைச்சியின் அளவிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அறியப்பட்டது
- பசும் புல்லுடன் கோதுமை தவிடு 200 கிராம் அளித்து வளர்க்கப்படும் ஆடுகளுக்கு கூடுதலாக 240-250 கிராம் உலர்ந்த துவரை இலைகளை அளித்தால் அவைகளில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறன் போன்றவை பசும் புல் கோதுமை தவிட்டுடன் தீவன காராமணி இலை அல்லது தீவன அவரை இலைகளை உட்கொண்டால் ஏற்படுவதற்கு இணையாக இருக்கும்
மரத் துவரை பயிரிட்டு துவரை காய்களுடன் ஆண்டு முழுவதும் பசும் துவரை இலை மகசூல் பெறுங்கள்
- தமிழ் நாட்டில் துவரை ஓராண்டு மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகின்றது
- மானாவாரி வேளாண்மையில் ஊடு பயிராக, குறிப்பாக நிலக்கடலையுடன் ,சாகுபடி செய்யப்படுகின்றது
- இப்பயிர் தனிப்பயிராகவும் சாகுபடி செய்யப்படுகின்றது .
- ஓராண்டு பயிராக ஊடு துவரை சாகுபடி செய்வது போலவே இந்த பல்லாண்டு பயிரான மர துவரையை ஊடுபயிராக சாகுபடி செய்யமுடியும்.
- இந்த மரப்பயிர் ஓரளவு நிழலை தாங்கி வளரும். ஆரம்பத்தில் இந்த பயிர் மிக மெதுவாக தான் வளரும் .
- இந்த பயிர் முளைத்த 30 நாட்களில் 10% அளவிலும் 60 நாட்களில் 50%அளவிலும் சூரிய ஒளியை தான் மறைக்கும்
- மர துவரை இலைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனம் இந்த செடி மானாவாரியில் வருடத்திற்கு 3-4 அறுவடையில் எக்டருக்கு3.5—6.0 டன் இலைகளை அளிக்கும்.
- இறவையில் 3 அறுவடைகளில்10-15 டன் பசும் இலை தீவனம் அளிக்கும்.
- இதன் இலைகளில் 17 -32 % புரத சத்து உள்ளது பிற பயிர்களை போல மழை காலங்களில் இலை உற்பத்தி அதிகமாக இருக்கும்.
- அதிக புரத சத்து கொண்ட இதன் இலைகளை புரத சத்து குறைந்த பிற புற்கள் அல்லது வேளாண் கழிவுகளுடன் சேர்த்து அளிக்க வேண்டும் .
- இந்த துவரை மரத்திலிருந்து உலர்ந்து விழும் இலைக இலைகளில் புரத சத்து 8—9 % வரை இருக்கும்.
- தனிப்பயிராக எக்டருக்கு 27,000 செடிகள் நட வேண்டும். தண்ணீர் தேங்கினால் இந்த பயிர் அழிந்துவிடும்
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
Comments
Post a Comment