கறவை மாடுகளின் மடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பால் பண்ணையை இலாபமாக்குங்கள்
பால் பண்ணை தொழிலில் இலாபம் ஈட்ட பால் மடியை பேணிக்காத்து
மடி நோயை தவிருங்கள்
கறவை மாடுகளில் மடி நோய் என்பது மாடுகளின் பால் மடியை தாக்கும் நோயாகும். இதனால் மாடுகளின் பால்சுரப்பு குறைந்து விவசாயிகள் நட்டமடைவார்கள். இந்த மடி நோய் என்பது இரு வகைகளில் மாடுகளின் ஏற்படுகின்றது. முதல் வகையில் இது நோய் அறிகுறிகளுடன் காணப்படும் ( Clinical Mastitis ). இரண்டாம் வகையில் அறிகுறிகள் இல்லாமல் காணப்படும் ( Sub- clinical Mastitis ). இந்த முதல் வகை மாடுகளின் அதிக பட்ச பால் கொடுக்கும் காலங்களில் அதாவது பெரும்பாலும் கன்று ஈன்ற முதல் 3 மாத காலங்களில் ஏற்படுகின்றது. இந்த காலகட்டத்தில் மாடுகள் மிக அதிகப்படியான அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த அழற்சி மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைகின்ற காரணத்தால் மாடுகளின் மடி காம்பு வழியே உட்செல்லும் நோய் கிருமிகள் மிக விரைவாக நோயை உண்டாக்கும்.
மடிகாம்பிலிருந்து பால் வெளிவரும் துளையானது பால் கறக்கப்பட்ட 15-20 நிமிடங்களில் மிக இறுக்கமாக மூடிக்கொள்வதால் நோய் கிருமிகள் மடியின் உட் செல்வது முதல் கட்டமாக தடுக்கப்படுகின்றது. பால் கறந்த 15-20 நிமிடங்கள் வரை மாடுகளை தரையில் படுக்கவிடக்கூடாது. இரண்டாவது கட்டமாக மடிக் காம்பின் உள்ளே மடியிலிருந்து காம்பின் வழியே பால் வெளிவரும் பாதை “கிரடின்"(Keratin) என்ற ஒரு வகை செல்களால் சூழப்பட்டிருக்கும். இந்த கிரடின் செல்கள் மடிக்காம்பின் வழியே நுழைந்த நோய்க்கிருமிகள் மடியின் உள்ளே நுழைவதை தடுக்கின்றன.
நீங்கள் பால் கறக்கும் முறையைப் பொறுத்து இந்த கிரடின் செல்கள் சிதைக்கப்படுகின்றன. ஓவ்வொரு முறை பால் கறக்கும் பொழுதும் சுமார் 40% வரை இந்த செல்கள் சிதைக்கப்படுகின்றன. அப்படி சிதைக்கப்பட்ட கிரடின் செல்கள் மீண்டும் உருவாகி நோய் கிருமிகள் உள்நுழைவதை தடுக்கின்றன. ஆனால் இந்த செல்கள் அதிக அளவில் சிதைக்கப்பட்டு அவை மீண்டும் உருவாவதில் பிரச்னை ஏற்பட்டால் நோய் கிருமிகள் மிக எளிதில் மடியின் உட் சென்றுவிடும்.
உயிர் சத்துக்களான A, E மற்றும் தாது சத்துக்களான செலினியம், துத்தநாகம், தாமிரம் போன்றவைகளும் மாடுகளுக்கு நீங்கள் அளிக்கும் தீவனத்தில் இருக்கும் எரிசத்தும் தான் பால் மடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன .
உயிர்சத்து Eல் Anti oxidant என்ற தன்மை உள்ளது. இது மடிக் காம்பின் கிரடின் செல்களை பாதுகாக்கின்றது. செலினியம் தாது பால் மடியில் நோய் கிருமிகள் தங்கி இருக்கும் காலத்தை குறைக்கின்றது. அதனால் உயிர் சத்து E மற்றும் செலினியம் தாதுவை மாடுகளின் தீவனத்தில் சேர்ப்பதால் பால் மடிக்கு நோய் எதிர்ப்பு திறன் சிறப்பாக கிடைக்கும்.
குறிப்பாக மாடுகள் பால் வற்றும் காலத்தில் ஆரம்பித்து மாடுகள் அதிகம் பால் சுரக்கும் மூன்று மாத காலம் வரை தீவனத்தில் உயிர் சத்து E மற்றும் செலினியம் தாது இருக்கும் படி தீவன பராமரிப்பு செய்தால் மாடுகளில் மடி நோய் வராமல் தவிர்க்க முடியும். மாடுகளுக்கு அளிக்கப்படும் நல்ல பசும் தீவனங்களில் உயிர் சத்து E அதிகமாக உள்ளது. அதனால் கறவை மாடுகளுக்கு பால் வற்றும் காலம் தொடங்கி வருடம் முழுவது நாள் ஒன்றுக்கு மாடுகளின் உடல் எடையைப் பொறுத்து 30 முதல் 35 கிலோ பசும் தீவனம் அளிக்க வேண்டும்.
புற்கள் முற்ற முற்ற அதில் உயிர் சத்து E குறைய ஆரம்பிக்கும். அதனால் பரிந்துரைக்கப்பட்ட கால அளவில் புற்களை அறுவடை செய்து மாடுகளுக்கு அளிக்க வேண்டும். மாடுகளுக்கு அளிக்கப்படும் தாமிர சத்து குறிப்பாக பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல் படும் ஆற்றல் கொண்டவை.
துத்தநாக தாதுசத்து மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக தேவைப்படுகின்றது இந்த தாது keratin செல்கள் உற்பத்திக்கும் மிகவும் அவசியமானது. கன்று ஈன மூன்று வாரங்கள் தொடங்கி கன்று ஈன்ற குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் வரை அவைகளுக்கு அதிக எரிச்சத்து மற்றும் அதிக புரதம் கொண்ட தீவனத்தை அளிக்க வேண்டும்.
மாடுகளுக்கு பால் வற்றிய மாதங்களில் உயிர் சத்து E யை 1000IU அளவிலும் பால் கறக்கும் மாதங்களில் 500 IU அளவிலும் ஊசி மூலம் அளிக்கப்படவேண்டும். மாடுகளுக்கு அளிக்கப்படும் மொத்த தீவனம் மூலம் செலினியம் 0.3ppm ,துத்தநாகம் 20ppm மற்றும் தாமிர சத்து 20-40ppm அளிக்கப்படவேண்டும். மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனங்களில் இருக்கும் தாது சத்துக்களின் அளவு கீழ்கண்ட அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை பயன் படுத்தி மாடுகளின் தீவனத்தை தயாரிக்கவேண்டும்.
இத்துடன் பால் கறப்பதற்கு முன்பின்பும் மற்றும் மடிக்காம்புகளை சுகாதாரமாக பராமரிப்பது மடி மாட்டுக் கொட்டகையை சுத்தமாக வைத்திருப்பது போன்ற பராமரிப்பு முறைகளும் பால் மடியின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும்.
Comments
Post a Comment